“அப்பா
வணக்கம்”
“மகளா?
வணக்கம்!”
“அப்பா
சின்னமகள்
பேசுகிறேன்
சுகமாக இருக்கிறீரா?
பணி எப்படியோ?
உங்கள்
மேலாளர்
எப்படியோ?
அப்பா!
உங்கள் செல்லமகள்
பேசுகிறேன்!
அப்பா
ஆயிரங்கள் பல
தேடுறீங்களே!
அழகாக உடுக்கிறீங்களா?
உடம்பை
பார்த்துக்கொள்ளுங்கப்பா?
உங்கள்
உதிரத்தை ஓட்டி
உழைத்திட்ட காசு
கிட்டியதென்று
அம்மா சொன்னாங்க...!
அப்பா!
உங்களைக் கண்டு
நான்கு வருடங்களாச்சு
எனக்கு
இப்போ
வயது ஐந்து அப்பா!
எத்தனை வருடங்களுக்கு
ஒருமுறை
அப்பா நீங்கள்
வந்து போவீங்கள்?
எனக்கு
தெரிந்த நாள்தொட்டு
இன்னும் வரவே இல்லையே
ஏன் அப்பா?
அம்மாவுடன் கோபமா?”
“மகளே!
நலமாக இருக்கிறன் நான்!
உனக்காக
பொம்மைகள் .......
விதவிதமாய்
ஆடைகள்!
பேசும் கிளியும்
வாங்கிவைத்திருக்கிறன் மகளே!
நாட்டுக்கு
வந்துபோவாரிடம்
அனுப்புகிறேன்
எந்தன் செல்லமகளே!
வேலையும் கஷ்டமில்லை
நோயும் எனக்கில்லை!
தொல்லையே இல்லாமல்
நீங்களெல்லாம்
சுகண்டியாக வாழ்ந்திடலாம்
கண்ணே! விளங்குதா கண்ணே?”
“அப்பா !
எனக்கு
பொம்மையும் வேண்டாம்
புதுவித ஆடைகளும்
வேண்டவே வேண்டாம் அப்பா!
நீங்கள்தான்
வேண்டுமப்பா!
உங்களைத்தான்
காண வேண்டுமப்பா!
என் உயிர் அப்பா!
நீங்கள் அனுப்பில
காசில்
அம்மா எனக்கும்
தந்திருந்தா....!
அப்பா!
உங்களுக்கு
சம்பளம் எவ்வளவு அப்பா?
ஒரு மணித்தியாலயத்துக்கு
எவ்வளவு அப்பா?
சொல்லுங்கள் அப்பா
சொல்லுங்கள்?
(விம்முகிறது குரல் பெருமூச்சாய்....)
என் தங்க அப்பா நீங்களல்லோ
அம்மா தந்த காசில்
என்னிடம்
பல உண்டு அப்பா!
சேமித்து வைத்திருக்கிறன்!
அப்பா!
அங்கு உங்களுக்குத்தரும்
மணித்தியாலக் கூலியை
நான் தருகிறேன் அப்பா!
ஒரே ஒரு மணித்தியாலம்
எனக்காக
வந்துவிட்டுப் போங்கப்பா!
உங்களைக் காண வேண்டும்
உங்களைக் காண வேண்டும்
அப்பா!............. அப்பா.......!!
என் போல சிறுவர்கள்
அப்பாமாருடன்
இனிதாகச் சிரித்திருக்க
என் மூச்சு
உயரே ஏறி
இறங்க முடியாமல் தவிக்கிறது அப்பா!
அப்பா!
வாருங்கள் அப்பா!
எனக்காக
ஒரு மணிநேரம்
தாங்க அப்பா!
எனக்கு
சாக்லட் பலவிதமாய்
வேண்டாம்! வேண்டாம்!!
எனக்கு
நீங்கள்தான்
வேண்டுமப்பா!
நீங்கள் வந்து
என்னை உதைத்தாலும்
அடித்தாலும்
திட்டினாலும்
ஒன்றும் சொல்லேன்!
அப்பா
நீங்கள் ஒரே ஒருமணிநேரத்திற்காய்
வந்துபோங்கள் அப்பா!
வந்துபோவாரிடம்
எனக்கு ஒன்றும்
வேண்டாம் அப்பா!
வாருங்கள் அப்பா வாருங்கள்!!
-------------------
2012-08-22 5:58
-கலைமகன் பைரூஸ்
நன்றி
இலண்டன் தமிழ்வானொலி 2012 - 0 8- 23
கருத்துரைகள்
Nagoorkani Kader Mohideen Basha
//எனக்கு ஒன்றும்
வேண்டாம் அப்பா!
வாருங்கள் அப்பா வாருங்கள்!! எனக்காக
ஒரு மணிநேரம்
தாங்க அப்பா!//
Arun Vasagan
nanru kalaimagan sir ...oru kulanthayin aalamaana anbin velippadu ..urayadal saayalil amaintha nalla padaippu...pakirnthu kondmaiku mikka nanri ..:-)
Arun Vasagan
//அங்கு உங்களுக்குத்தரும்
மணித்தியாலக் கூலியை
நான் தருகிறேன் அப்பா!
ஒரே ஒரு மணித்தியாலம்
எனக்காக
வந்துவிட்டுப் போங்கப்பா!//
Mohamed Faris Fari
ithu unkallukku sinna kavithai but ithu thaan yankalloda life
Shanthini Rasathy
எத்தனையோ குடும்பங்களின் நிலை இப்பொது இதுதான் ...ஆனால் குழந்தைகளுக்கான அன்பு மறுக்கப்படுவது ...அவர்களின் உரிமை மறுக்கப்படுதல் போன்றது....
Razana Manaf
உங்களின் மரபுக்கவிதைகளுக்கு மத்தியில் இப்படியொரு ஆழமான புதுக்கவிதை வாசிக்க கிடைத்ததில் மகிழ்ச்சி ஆனாலும் கவிதை கண்ணீரைத்தான் வர வைத்துவிட்டது ஒன்றா இரண்டா லட்சோபலட்சம் அப்பாக்களின் உணர்வுகள் இப்படிதான்...இப்போது இழக்கும் எதுவும் திரும்ப கிடைக்காது என்பது கண்முன் தெரிகிறது ஆனாலும் வேறு வழியில்லை அதனால் தான் தங்களுக்கு தாங்களே ஆறுதல் தேடிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்...பாராட்டுக்கள் சகோதரா அழகான இந்த கவிதைக்கு..!!
உன் எதிர்கால வாழ்க்கை நன்றாக அமையவேண்டும் என் செல்ல மகளே அதற்காகவேண்டியே உன் அப்பா இவனின் நிகழ்கால வாழ்க்கையை உனக்காக அர்ப்பணிக்கிறேன்...!!
இப்படிதான் ஆறுதல் தேடவேண்டியதாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக