ஆரவாரமேதுமின்றி நின்றாள் ஒரு சகி!
ஆழ்ந்து படிப்பதன்றி வேறிலை அவளில்
நேராகப் படித்தாள் பலபோழ்து கவிகள்
நேசித்தாள் கவிதைக்காதலனை இவள்!
தேடினாள் அவன்திருவுரு எங்ஙனும்
தோய்ந்தாள் முகநூலில் எங்ஙனும்
நாடித்தான் பிடித்தாள் அவன்யாரென
நலமாம் காதல் மேகமாய் ஓடின....!
--------------------------------------------
(வா)சகி.....!
-----------------
தமிழைத்தான் நேசித்தேன் நிறைவாக
தரமான கவிதைதான் நேசித்தேன்
உமிநீங்கிய அரிசியென இருந்ததை
உரமாக வைத்தேதான் நேசித்தேன்!
குணமான நற்கவிதை நாளுந்தான்நீர்
குவலயமே போற்றுதற்காய் தந்தீர்
மணமாக என்றுந்தான் என்னுள்
மங்காத புதுஉறவாய் வந்ததுகாண்!
சொல்லெலாம் தேன்சொட்டாய் வந்ததே
சொலவியலா இன்பந்தான் கண்டேன்
சொல்லெல்லாம் உனதான கவியாச்சு
சொர்க்கந்தான் கண்டேன் நானேபோச்சு!
பைந்தமிழின் காதல்க்கும் நீளுகின்ற
பண்பான சொற்களுக்குமாய் நின்று
தந்தேன் மனதெலாம் உன்கவிக்கு
தருவாய்நீ உன்“கவிகள்” எனக்கான!
சந்தித்த கவிதைக்கு காதலியான்
சுந்தரமாய் சேர்ந்திடத்தான் வேண்டும்
நிந்திக்க வேண்டாமே எனைநீ
நிறைவான கவிதைதா எனக்கு!
சொல்புதிதாய் சுவைபுதியாய் உளதாய்
சொல்வல்லான் நீஇணைய வேண்டும்!
சொல்லிடுவர் நீரொடு நீரிணைந்ததென
சொக்கிப்போவே யுன்னுடனே - கவியுடனே!
பேதையரை பண்பாகப் பார்க்கின்றாய்
பேதைமைக் குணத்தை நீயழிக்கின்றாய்!
நாதியிலா நல்லவர்க்காய் ஏங்குகின்றாய்
நாடுகிறேன் உனை நானும் எழுத்துக்காய்!
நாடுகின்ற எனைநான் சொல்வேன்பா
நீஎழுது எனக்கென ஒருபாத்தானும்பா
சூடாக விருந்தாலும் அதுகாணும்
சுந்தரமாய் உனையேற்பேன் கவிதைக்காய்!
கவிஞன்!
--------------
வாசகிபல்லோரில் நீயொருத்தி
வாசம்தான் தந்தது உன்னெழுத்து
நேசித்தேன் உன்னெழுத்தை கவியாய்
நீயுமல்லோ நற்கவிதாயினி என்பேனே!
கற்றிட்டாய் கவிதைகள் பலவாய்
காரிகை நீ அறியாமல் ஆனாய்கவி
பெற்றிட்ட நற்றோழி நீயல்லோசகி
பேருற்றேன் உன்காதல் மொழியுற்று!
சுந்தரமாம் நற்றமிழின் காதலினால்
சுவைக்கின்றாய் எனையெலாம் சீராய்
தந்தேன் நானுந்தான் கவியுன்பால்
தருவாய் நீயுந்தான் கவித்தேன்நாட!
தேடுகின்ற நல்லுளங்கள் வாராதே
தெளிவின்றி இருந்தாயோ சீறாதே!
நாடுகின்ற நானல்லோ உன்னீர்ப்பு
நாட மேலுந்தருவேன் கவியேநான்!
என்கவிகண்டு காண்கின்றாய் கனவு
எனதான கவிதைக்கு அரவணைப்பு
புன்னகையும் பரந்துவரும் சுரந்து
பேதைமனம் இதுவல்லோ - நினைப்பு!
சீரான நற்கவிகள் நீயுந்தான் தாவெமக்கு
சீதளமாய உன்கவிகள் யான்கண்டு
மாறாத உளத்தவனாய் காண்பேன்நான்
மங்காத என்கவிபோல் உன்கவியும்வருக!
உன்னைப் போற்றுதற்கே கவிதருவேன்
உன்னிலை நின்று எழுதிடுவேன் கவிநான்
இன்பந்தான் விளையும் இணைந்திருக்க
இறைதுணை வருமாயின் பிணைப்பே!
கவிதைக்குச் சகியல்ல கவிதாயினி
கவிகாண்பேன் காதலிப்பேன் உன்கவி
நோவாமல் சொல்கின்றேன் பண்பாக
நேராக வந்து எனைப்பேசு வருவேன்!
சீரழிந்த சீதனமெல்லாம் எதற்கு
சிந்தைதெளி நல்லியல்பாள் நீயல்லோசகி
பேரான நற்றொழில் நான்பெற்று
பேதையுனை கரம்பிடிப்பேன் தெளி!
----------------------
- மதுராப்புர
கலைமகன் பைருஸ்
2012 - 08 - 24
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக