It கலைமகன் கவிதைகள்: கண்ணிலாத ஏகாதிபத்தியமே!

வெள்ளி, 8 அக்டோபர், 2010

கண்ணிலாத ஏகாதிபத்தியமே!



எல்லாமும் தமதாக்க எண்ணும்தீய
ஏகாதிபத்திய ராஜ்யமே யுந்தன்
பொல்லாத கழுகுச் சிந்தனையாலே
பலஸ்தீன்மண் மரணப்பிடியிலின்று!

சியோனிசத்தொடு வாகாய்நீயிணைந்து
சாந்தமாய் வாழ்ந்திட்ட புனிதமண்மீது
தீயோராம் இஸ்ரவேலுக் கிடமுண்டாக்கி
தாயமக்களுக் கநியாயம் செய்தனையே!

தாயகமண்ணில் தரமாய்வாழ்ந்திட்ட
தீதொன்றறியா மாந்தரை கருவழித்திட
பொய்முகந்தரித்து துரத்தியதேனோ
போலிவேஷமுந்தன் பார்கண்டதே!

கண்ணிலாத ஏகாதிபத்தியமே யுந்தன்
காடைச்செயலால் கதறும் மாந்தர்
விண்ணகமேகிய மண்ணகத்தினிலின்று
வழிந்திடக் கண்ணீர் ஏகினர் எங்கோ?

விட்டுவைத்தனையோ அபகரித்தாய்நீ
வல்லரக்கனே யுந்தன் அடாச்செயலில்
விதவையான பெண்டிரும் பாலரும்பார்!
கண்டாயானந்தம் கொன்றொழித்தேநீ!

அக்றேன்ஜபா லித்தாவுடன் பெய்சானும்
அழிந்தன ஒழிந்தன மாந்தர் - பாவமே!
திக்குத்தெரியாதே யழிக்கின்றாய்நீ
தெரிந்திடுஅழிவு அடுத்துளதென்பதுநீ!

எல்லாமு மெல்லாமும் எம்சொந்தம்
எல்லோரும் எமக்கே பணிந்திடுகென்று
பொல்லாத ஆணையிடும் உந்தனுக்கழிவு
பாரில் வெகுதூரமிலை – அறியாயோ?

நாளொன்றும் பொழுதொன்றும்மண்மீது
நமக்கென்று விடிவுவரும் எனஏங்கும்
உளங்களீற்றில் மரணத்தின்கரங்களிலே!
உதிரத்திலோடுது உந்தன்பாவக்கரையே!!

என்னபாவ முனக்குச் செய்தனையோ
எல்லாமும் பெறுதற்கு செய்தனையோ
சொன்னோம்நாம் உந்தனுக்கு உரத்து
சொப்பனங்க ளென்றும் நிலையிலாதே!

சொந்தமண்ணில் வாழ்ந்த சனத்தைநீ
சாத்தானா யெழுந்து அழிக்கின்றாய்!
இந்தோபார் இச்சிசுவை -அடப்பாவமே
இரத்தக்கரையொடு வடியுதுவனப்பே!

கரமீது கல்மட்டும் தாங்கிநிற்கும் -இக்
கதியிலாத மாந்தரை கொடுங்கணையால்
புறமுதுகு காட்டிடச்செய்தனை –வெட்கம்
பாவத்தினடிவேரே கண்ணிலாநீ –ஓடிவிடு!

இலட்சங்கள் பலவிருந்த பலஸ்தீனில்
இத்தனை நூறுக ளென்பதில் சுகமோ?
உலகமேயுந்தன் வக்கிரம் கண்டின்று
உரத்துப்பேசுது உனக்கெதிராய்க் காண்!

பொல்லாத புன்மனமே யுந்தன்
பொல்லாத வன்செயல்நீங்காதோ?
நில்லாத நிலத்தினை நிஜமெனநம்பி
நிந்தனைசெய்வது தப்புத்தப்பு மிகத்தப்பு!

பலகல்லெறிந்திட ஒருகல்லெரித்திடுமே
பலஸ்தீன்மண் உள்வாங்கும் ஒருபோது
விலங்கினமனமே – அராஜகஅடிக்கல்லே
வையம் தகர்த்திடுமுனை யறியாயோ?

சாந்திமார்க்க மழித்திட எழுந்தனைநீ
சத்தியமாய் முடியாதுனக்கு நீயறிவாய்
மந்திக்குணத்து ராஜ்யமே - நீபாரில்
மடிந்த முன்னோர்காதை யறியாயோ?

அநியாயத்தி னடிநாதமே யுந்தன்
அடாதசெயல்நீக்கு அடுத்துநீங்கு
புனிதமண்மீது புனிதர்வாழ்ந்திடநீ
பவக்கரை கரைந்திடவேனும் நீங்கு!

-கலைமகன் பைரூஸ்
இலங்கை






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக