It கலைமகன் கவிதைகள்: ஆகஸ்ட் 2012

சனி, 25 ஆகஸ்ட், 2012

என்கவிபோல் உன்கவியும் வருக!


ஆரவாரமேதுமின்றி நின்றாள் ஒரு சகி!
ஆழ்ந்து படிப்பதன்றி வேறிலை அவளில்
நேராகப் படித்தாள் பலபோழ்து கவிகள்
நேசித்தாள் கவிதைக்காதலனை இவள்!

தேடினாள் அவன்திருவுரு எங்ஙனும்
தோய்ந்தாள் முகநூலில் எங்ஙனும்
நாடித்தான் பிடித்தாள் அவன்யாரென
நலமாம் காதல் மேகமாய் ஓடின....!



















--------------------------------------------

(வா)சகி.....!
-----------------

தமிழைத்தான் நேசித்தேன் நிறைவாக
தரமான கவிதைதான் நேசித்தேன்
உமிநீங்கிய அரிசியென இருந்ததை
உரமாக வைத்தேதான் நேசித்தேன்!

குணமான நற்கவிதை நாளுந்தான்நீர்
குவலயமே போற்றுதற்காய் தந்தீர்
மணமாக என்றுந்தான் என்னுள்
மங்காத புதுஉறவாய் வந்ததுகாண்!

சொல்லெலாம் தேன்சொட்டாய் வந்ததே
சொலவியலா இன்பந்தான் கண்டேன்
சொல்லெல்லாம் உனதான கவியாச்சு
சொர்க்கந்தான் கண்டேன் நானேபோச்சு!

பைந்தமிழின் காதல்க்கும் நீளுகின்ற
பண்பான சொற்களுக்குமாய் நின்று
தந்தேன் மனதெலாம் உன்கவிக்கு
தருவாய்நீ உன்“கவிகள்” எனக்கான!

சந்தித்த கவிதைக்கு காதலியான்
சுந்தரமாய் சேர்ந்திடத்தான் வேண்டும்
நிந்திக்க வேண்டாமே எனைநீ
நிறைவான கவிதைதா எனக்கு!

சொல்புதிதாய் சுவைபுதியாய் உளதாய்
சொல்வல்லான் நீஇணைய வேண்டும்!
சொல்லிடுவர் நீரொடு நீரிணைந்ததென
சொக்கிப்போவே யுன்னுடனே - கவியுடனே!

பேதையரை பண்பாகப் பார்க்கின்றாய்
பேதைமைக் குணத்தை நீயழிக்கின்றாய்!
நாதியிலா நல்லவர்க்காய் ஏங்குகின்றாய்
நாடுகிறேன் உனை நானும் எழுத்துக்காய்!

நாடுகின்ற எனைநான் சொல்வேன்பா
நீஎழுது எனக்கென ஒருபாத்தானும்பா
சூடாக விருந்தாலும் அதுகாணும்
சுந்தரமாய் உனையேற்பேன் கவிதைக்காய்!

கவிஞன்!
--------------

வாசகிபல்லோரில் நீயொருத்தி
வாசம்தான் தந்தது உன்னெழுத்து
நேசித்தேன் உன்னெழுத்தை கவியாய்
நீயுமல்லோ நற்கவிதாயினி என்பேனே!

கற்றிட்டாய் கவிதைகள் பலவாய்
காரிகை நீ அறியாமல் ஆனாய்கவி
பெற்றிட்ட நற்றோழி நீயல்லோசகி
பேருற்றேன் உன்காதல் மொழியுற்று!

சுந்தரமாம் நற்றமிழின் காதலினால்
சுவைக்கின்றாய் எனையெலாம் சீராய்
தந்தேன் நானுந்தான் கவியுன்பால்
தருவாய் நீயுந்தான் கவித்தேன்நாட!

தேடுகின்ற நல்லுளங்கள் வாராதே
தெளிவின்றி இருந்தாயோ சீறாதே!
நாடுகின்ற நானல்லோ உன்னீர்ப்பு
நாட மேலுந்தருவேன் கவியேநான்!

என்கவிகண்டு காண்கின்றாய் கனவு
எனதான கவிதைக்கு அரவணைப்பு
புன்னகையும் பரந்துவரும் சுரந்து
பேதைமனம் இதுவல்லோ - நினைப்பு!

சீரான நற்கவிகள் நீயுந்தான் தாவெமக்கு
சீதளமாய உன்கவிகள் யான்கண்டு
மாறாத உளத்தவனாய் காண்பேன்நான்
மங்காத என்கவிபோல் உன்கவியும்வருக!

உன்னைப் போற்றுதற்கே கவிதருவேன்
உன்னிலை நின்று எழுதிடுவேன் கவிநான்
இன்பந்தான் விளையும் இணைந்திருக்க
இறைதுணை வருமாயின் பிணைப்பே!

கவிதைக்குச் சகியல்ல கவிதாயினி
கவிகாண்பேன் காதலிப்பேன் உன்கவி
நோவாமல் சொல்கின்றேன் பண்பாக
நேராக வந்து எனைப்பேசு வருவேன்!

சீரழிந்த சீதனமெல்லாம் எதற்கு
சிந்தைதெளி நல்லியல்பாள் நீயல்லோசகி
பேரான நற்றொழில் நான்பெற்று
பேதையுனை கரம்பிடிப்பேன் தெளி!

----------------------
- மதுராப்புர
கலைமகன் பைருஸ்
2012 - 08 - 24

புதன், 22 ஆகஸ்ட், 2012

எனக்காக ஒருமணி நேரம்!



“அப்பா
வணக்கம்”

“மகளா?
வணக்கம்!”

“அப்பா
சின்னமகள்
பேசுகிறேன்
சுகமாக இருக்கிறீரா?
பணி எப்படியோ?
உங்கள் 
மேலாளர்
எப்படியோ?

அப்பா!
உங்கள் செல்லமகள்
பேசுகிறேன்!

அப்பா
ஆயிரங்கள் பல
தேடுறீங்களே!
அழகாக உடுக்கிறீங்களா?
உடம்பை
பார்த்துக்கொள்ளுங்கப்பா?

உங்கள்
உதிரத்தை ஓட்டி
உழைத்திட்ட காசு
கிட்டியதென்று
அம்மா சொன்னாங்க...!

அப்பா!
உங்களைக் கண்டு
நான்கு வருடங்களாச்சு
எனக்கு
இப்போ
வயது ஐந்து அப்பா!

எத்தனை வருடங்களுக்கு
ஒருமுறை
அப்பா நீங்கள்
வந்து போவீங்கள்?
எனக்கு
தெரிந்த நாள்தொட்டு
இன்னும் வரவே இல்லையே
ஏன் அப்பா?
அம்மாவுடன் கோபமா?”

“மகளே!
நலமாக இருக்கிறன் நான்!
உனக்காக
பொம்மைகள் .......
விதவிதமாய்
ஆடைகள்!
பேசும் கிளியும்
வாங்கிவைத்திருக்கிறன் மகளே!
நாட்டுக்கு 
வந்துபோவாரிடம்
அனுப்புகிறேன்
எந்தன் செல்லமகளே!

வேலையும் கஷ்டமில்லை
நோயும் எனக்கில்லை!
தொல்லையே இல்லாமல்
நீங்களெல்லாம்
சுகண்டியாக வாழ்ந்திடலாம்
கண்ணே! விளங்குதா கண்ணே?”

“அப்பா !
எனக்கு
பொம்மையும் வேண்டாம்
புதுவித ஆடைகளும்
வேண்டவே வேண்டாம் அப்பா!
நீங்கள்தான் 
வேண்டுமப்பா!
உங்களைத்தான்
காண வேண்டுமப்பா!

என் உயிர் அப்பா!
நீங்கள் அனுப்பில 
காசில்
அம்மா எனக்கும்
தந்திருந்தா....!

அப்பா!
உங்களுக்கு
சம்பளம் எவ்வளவு அப்பா?
ஒரு மணித்தியாலயத்துக்கு
எவ்வளவு அப்பா?
சொல்லுங்கள் அப்பா
சொல்லுங்கள்?

(விம்முகிறது குரல் பெருமூச்சாய்....)

என் தங்க அப்பா நீங்களல்லோ
அம்மா தந்த காசில்
என்னிடம் 
பல உண்டு அப்பா!
சேமித்து வைத்திருக்கிறன்!

அப்பா!
அங்கு உங்களுக்குத்தரும்
மணித்தியாலக் கூலியை
நான் தருகிறேன் அப்பா!
ஒரே ஒரு மணித்தியாலம்
எனக்காக
வந்துவிட்டுப் போங்கப்பா!
உங்களைக் காண வேண்டும்
உங்களைக் காண வேண்டும்
அப்பா!............. அப்பா.......!!

என் போல சிறுவர்கள்
அப்பாமாருடன்
இனிதாகச் சிரித்திருக்க
என் மூச்சு
உயரே ஏறி
இறங்க முடியாமல் தவிக்கிறது அப்பா!

அப்பா!
வாருங்கள் அப்பா!
எனக்காக
ஒரு மணிநேரம்
தாங்க அப்பா!

எனக்கு
சாக்லட் பலவிதமாய் 
வேண்டாம்! வேண்டாம்!!
எனக்கு
நீங்கள்தான் 
வேண்டுமப்பா!

நீங்கள் வந்து
என்னை உதைத்தாலும்
அடித்தாலும்
திட்டினாலும்
ஒன்றும் சொல்லேன்!
அப்பா
நீங்கள் ஒரே ஒருமணிநேரத்திற்காய்
வந்துபோங்கள் அப்பா!
வந்துபோவாரிடம்
எனக்கு ஒன்றும்
வேண்டாம் அப்பா!
வாருங்கள் அப்பா வாருங்கள்!!
-------------------
2012-08-22 5:58

-கலைமகன் பைரூஸ்

நன்றி
இலண்டன் தமிழ்வானொலி 2012 - 0 8- 23

கருத்துரைகள்

Nagoorkani Kader Mohideen Basha 
//எனக்கு ஒன்றும்
வேண்டாம் அப்பா!
வாருங்கள் அப்பா வாருங்கள்!! எனக்காக
ஒரு மணிநேரம்
தாங்க அப்பா!//

Arun Vasagan 
nanru kalaimagan sir ...oru kulanthayin aalamaana anbin velippadu ..urayadal saayalil amaintha nalla padaippu...pakirnthu kondmaiku mikka nanri ..:-)

Arun Vasagan 
//அங்கு உங்களுக்குத்தரும்
மணித்தியாலக் கூலியை
நான் தருகிறேன் அப்பா!
ஒரே ஒரு மணித்தியாலம்
எனக்காக
வந்துவிட்டுப் போங்கப்பா!//

Mohamed Faris Fari
ithu unkallukku sinna kavithai but ithu thaan yankalloda life

Shanthini Rasathy 
எத்தனையோ குடும்பங்களின் நிலை இப்பொது இதுதான் ...ஆனால் குழந்தைகளுக்கான அன்பு மறுக்கப்படுவது ...அவர்களின் உரிமை மறுக்கப்படுதல் போன்றது....

Razana Manaf 
உங்களின் மரபுக்கவிதைகளுக்கு மத்தியில் இப்படியொரு ஆழமான புதுக்கவிதை வாசிக்க கிடைத்ததில் மகிழ்ச்சி ஆனாலும் கவிதை கண்ணீரைத்தான் வர வைத்துவிட்டது ஒன்றா இரண்டா லட்சோபலட்சம் அப்பாக்களின் உணர்வுகள் இப்படிதான்...இப்போது இழக்கும் எதுவும் திரும்ப கிடைக்காது என்பது கண்முன் தெரிகிறது ஆனாலும் வேறு வழியில்லை அதனால் தான் தங்களுக்கு தாங்களே ஆறுதல் தேடிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்...பாராட்டுக்கள் சகோதரா அழகான இந்த கவிதைக்கு..!! 

உன் எதிர்கால வாழ்க்கை நன்றாக அமையவேண்டும் என் செல்ல மகளே அதற்காகவேண்டியே உன் அப்பா இவனின் நிகழ்கால வாழ்க்கையை உனக்காக அர்ப்பணிக்கிறேன்...!! 

இப்படிதான் ஆறுதல் தேடவேண்டியதாக இருக்கிறது.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

புலவோரைப் போற்றுகிறேன்!

உருவகங்களால் செதுக்கி
உயர்கவிகள்தரும்
உயர்கலைச் சிற்பி!
-----------------------------




அறிவொடு பண்பும் உள்ள
அமைதியும் கொண்ட நல்லோன்!
இறையொரு வனின் மாண்பை
இனிதெனச் சுவைத்திடும் வல்லோன்!
நறுக்கென நயந்திடும் கவிதந்து
நலமாய உருவகம் பொழிவான்!
பிறவழிச் செல்லாதே தமக்கென
பாவளம் கொண்ட கவியோன்!
மறைவழி நின்று மேலும்
மாண்புறு கவிதை தருவானோ?

-தமிழன்புடன்
கலைமகன் பைரூஸ்

பாவரசிக்குப்பா!
----------------------

























பாவுக்காப் பாவரசி நாமங்கொள்
பைந்தமிழ்க் காதலி - கலைமகள்
நோவாதே யுளங்கள் பார்ப்பாள்
நேசித்திடுவாள் மனிதத்தைநிதம்!

ஆற்றலுள ஹிதாயா ஈழந்தன்னில்
அழியாத பேருடையாள் - நிலைத்தாள்
போற்றுவம் புகழ்கோக்க பாரில்
பைந்தமி ழணங்குடன் வாழ!

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்
21-08-2012 10:55





வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

எல்லோரும் கொண்டாடுவோம்


விண்முகட்டில் வீழ்ந்து கிடக்கும்
வெண்ணிலாக் கீறலொன்று........
கார்க் கொன்றல் மிரட்டல் கண்டும்
சிரிக்கும் லேசாய் மெல்ல
ஷவ்வல் பிறையாகி!

நால் திங்கள் நடைபயில........
நூலிடையாய் "ஷவ்வல்" எட்டிப்பார்க்க.........
வேலியிட்டுத் தடுத்த உண்ணலும் பருகலும்
இறையாணையால் மீளெழுந்து எமை நோக்க
மறைந்துதான் போகும் நோன்பும்
மாண்பு பல தந்துவிட்டே!

நோன்புச்சாலை வழியோரம்
சிதறி வீழ்ந்த நம் தவறு.....!
கதறியழுதே துடித்திடுகையில்!
எமைக் காக்கும் கேடயமாய்
தழுவிக் கிடக்கும் "பித்ர் தர்மம்" !

உதரத் தசையீரங்களில்
உலர்ந்து கிடக்கும் ஆகாரங்களும்............
தொண்டையோர வெளிதனில்
வற்றிக் கிடக்கும் நீர்ச்சுணைகளும்.......
மீண்டும் சிலிர்த்துத்தான் தளிர்த்திடவே
வந்துவிடும் "ஈதுல் பித்ர் "நம்மருகே!

வறுமை கொண்ட ஆத்மாக்கள்
உருக்குலைந்தே வீழ்ந்து கிடக்கையில்.....
வசந்தமாய் எம் "ஸதக்கத்துல் பித்ர்" - அவர்க்கே
சுகந்தத்தை மெல்ல நெருடிக் கொடுக்க
பேதம் துறந்து புன்னகைக்க பெருநாளும்
வாசம் வீசி வந்திடுமே!

சாமம் கடந்து பொழுதும் புலர்ந்து
ஆதவன் மெல்ல வானேறுகையில்........
தென்றலின் நலனோம்பலும்
முன்றல் வந்து எட்டிப் பார்க்க .....
வெட்ட வெளிகளும் மடி தந்திடும்
அல்லாஹ்வைத் துதித்திடும் பள்ளிகளாய்......

நல்லமல்கள் செய்தோர் தம்
பேதமை துறந்து தக்பீர் முழக்கிட ..................
வல்லோன் புகழ் வசனங்களில்
எல்லோர் வார்த்தைகளும் உறைந்தே கிடந்திட
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம்!

"இரண்டு ரக்அத்தில்" இறைவன் இறைஞ்சி.............
மறைவேதமாம் திருக்குர்ஆனுமோதி - நம்
மூச்சுக்காற்றிலே பரக்கத்தைச் சுமந்து.....
முழு வாழ்வுமே ஒளியினைப் பொருத்த
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம் !

புத்தாடையும் பெருநாள் காசும்
புளாங்கிதமாயுண்ணும் பலகாரங்களும்..........
உறவுகளின் சந்தோஷிப்புக்களும்
இறைவனின் அருள் மணமும் - எம்
இல்லங்களை நிறைத்திடவே
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம் !!

ஈகைத் திருநாளில் கறையிடரகற்றி
உள்ளமதை உவப்பேற்றி....................
பாசத்துடன் எமைத் தரிப்போருக்கே
தேன் சுவை விருந்தும் பரிமாற....
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம் !!

உறவுகளின் வாழ்த்துச் சரத்தில் - எம்
மனைகளும் பூத்துச் செழித்திட
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம் - தன்
சிறப்பை தரணிக்குணர்த்தியே

- ஜன்ஸி கபூர்

//என்னைச் சூழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், நட்பினருக்கும் எனதினிய நோன்புப் பெருநாள் (முன்கூட்டிய ) வாழ்த்துக்கள்//

ஈத் முபாரக்!






வியாழன், 16 ஆகஸ்ட், 2012

வீழமாட்டானோ படுபாவி!



அகவை ஆறுமட்டுமே ஆன
அன்புக் குழந்தை அஃப்ரா
சீராய் ஆடிப்பாடி யிருந்தாளே
சுந்தரமாய்ப் பேசி நின்றாளே!
குழந்தை மொழியினில்
எத்துணை ஆசைகள் பெற்றோரில்!
ஆயினும்......

கொடுமை செய்வதில்
வில்லங்கம் செய்வதில்
மிட்டாயில் ஆசைகாட்டி
பூக்கள் தருவதில்
ஆசைகாட்டி
கபோதிஇவன்
செய்திட்ட கொடுமை
“கல்புகள்” துடித்திட
இரத்தக் கண்ணீர்வடித்திட
செய்கிறதே பாருங்கள்!

சின்னக்குழந்தை
புன்னகை பூப்பதும்
போலிஅன்பு காட்டுதலில்
மதிமயங்குதலும்
இல்லையா
சொல்லுங்கள்?

நான் என்றால்கூட
நிதனமாய்
பதில்சொல்லத்தெரியாத
பிஞ்சுமனத்தை
பூப்பறித்துத் தருகிறேன்
நீவாவென்று
பூவான அவளை
பிஞ்சு அப்ராவை
அழைத்துச்சொன்றானே
படுபாவி இவன்!
“கலாகத்ர்”
என்றுமட்டும் இவனை
விட்டுவிட்டால்
நாய்கள் நிறையவே
குரைக்கும்!


இன்று இந்தப்பிஞ்சு
நாளை...
நமதான
இளம்யுவதிகள்
தாய்மார்கள்
அளவிலாமல்
பேடிகளால்
மந்தபுத்திஎன்றும்
உளநோயாளிஎன்றும்
பேர்சூடிக்கொண்டு
வதைசெய்யப்படலாம்
சரியா?

தேனொழுகப் பேசி
தேள்போலக் கொட்டும்
இந்த விசமிபோலும்
இடுகாட்டுநரிகளின்
ஊளையடக்க
எழுந்திட வேண்டாமோ?

என்ன பாவம்
இந்தப் பிஞ்சுள்ளம்
செய்தது?
நெஞ்சுவெடிக்கிறது....!
“இவன்செய்த
தகாத கொடுமைக்கு
சட்டம் நிச்சயம்
தண்டனை கொடுக்கும்”
இது நகைப்பானகூற்று!
வந்துடுவான் இவன்
நாசமாப்போவ
மீண்டும்
பித்துஎனச்சொல்லி
எத்தனையோ
பிள்ளைகளைச் சாய்க்க....!
கறுப்புத் துணிகட்டிய
நீதியின் கண்கள்
நீதியாக
அநீதிசெய்தவனை
கழுமரத்தில் ஏற்றுமா?
விடைகாணாமல்
ஆயிரமாயிரம்
வாய்கள் முணுமுணுக்கின்றன!

பேசாமடந்தைகளாக
விழிபதுங்கி நாமிருந்தால்
கற்பனைகள் சுமக்கும்நாம்
விகற்பங்களாகத் திரிவோம்!
எமது தார்மீக சட்டம்
இந்த “நல்ல“ நாட்டில்
ஒருபோதும்
உச்சாணியில் ஏறாது!

நமது தலைகள்
பம்மாத்துப் பேசுவதிலும்
கைகள் கூப்புதலிலுமே
நாளாந்தம் இருப்பதால்
எக்கேடுகெட்டாலும்
சும்மாதான் நிற்கும்!
வெறும் வீராப்புமட்டும்தான்
நம் ஆண்களுக்குள்
சேலை மிகப்பொருத்தம்!!

சின்னஞ்சிறு உருவம்
இப்போதும்
மனக்கண்களுக்குள்
கண்ணீரை
ஆறாய்த் தள்ளுகிறது!
இந்த
தரங்கெட்டானின்
ஈனச்செயல் எண்ணி
இவனை
சாயத்திடத்துடிக்கிறத!

பிஞ்சுமனமாய்
எங்கள் மனம்
வேதனையால்துடிக்கும்போது
அவன்மட்டும்
ஒய்யாரமாய்த்தான்
அங்கிருப்பான்!

இனியேனும்
நமது அஃப்ராக்கள்
எனதான அஃப்ராவாக
எனது கண்மணியாக
வலம்வர
தனித்துவத்துடன்
இருக்க வேண்டாமோ?
கிளிப்பிள்ளைகளுக்கும்
கெட்டாரை
ஒட்டவேண்டாமென்று
கர்ப்பத்திலேயே வைத்து
சொல்லிக்கொடுங்கள்!
பெண்புத்தி பின்புத்திஎன்று
சொல்லிச்சொல்லி
வைத்தது இனிப்போதும்!!

மனநோயாளியாவது
மண்ணாங்கட்டியாவது
பெண்பித்துதான் இவனுக்கு
மானமில்லாத பேடி!
இவன்போன்ற பேடிகளில்
ஈனச் செயலிலிருந்து
முத்திபெற
“பெண்பிள்ளைகளுக்கு
சமூகப்பால் ஊட்டுங்கள்!
இல்லாவிட்டால்
என்றும்
வேதாளம் முருங்கைமரத்தில்
ஏறும் கதைதான் நிகழும்”

இறைவா!
இந்தப் பிஞ்சுஉள்ளம்
மேலான சுவர்க்கத்தில்நுழைய
கருணைசெய்வாயாக!
இந்தநரகாசுரனுக்கு
விரைவிலேயே
நல்லபாடம் நீ கற்பிப்பாயாக!
நீயே அனைத்தும்
நன்கறிந்தவன்!


-கலைமகன் பைரூஸ்

(வெலிகம கோட்டகொடை பாத்திமா அஃப்ரா (6) என்ற சிறுமியை மண்வெட்டியால் வெட்டிச் சாய்த்த பாதகனின் நிழற்படம் கீழேஉள்ளது.)




கருத்துரைகள்

Seyed Hussain 
சோகத்தை சொல்லும் கவிதையல்ல இது .மனதை உலுக்கும் கவிதை. இந்ததக் கோரச் சம்பவத்தை அழகாக சித்தரித்துளீர்கள். நீதியும் ,நியாயமும், சட்டமும் , ஒழுங்கும் அவர்கள் கைகளில் இருக்கின்றது. அநீதிக்கு நீதிமுலாம்
பூசும் அவர்களது கைங்கரியம் ஒருநாள் மடிந்தே தீரும்.
18-08-2012

Vinothan Rasamanikkam 
அருமையான் உருக்கமான வரிகள்.....
19-08-2012



வருக ஈகைத் திருநாளே!

மலரவுள்ள ஈகைத் திருநாள் அனைத்து உள்ளங்களுக்கும் இன்பம் நல்கிட எனது பிரார்த்தனைகள்!



திங்களொன்று நோன்பு நோற்று
தராவீஹ் தஸ்பீஹ் முறையாய்செய்து
இங்கிதமாய் சுற்றத்தொடு சேர்ந்தமர்ந்து
இனிதாய் இப்தார் செய்திட்டோமே!

அதிகாலை துயிலெழுந்து தொழுது
அன்பாய்க்கூடி ஸஹர்செய்து – பின்
கதிமிகதந்திடும் ஸுப்ஹும் தொழுது
குர்ஆன் ஓதிட்டோமே திங்களிதில்!

செய்த தவறுக்காய் தேம்பியழுது –நம்
தேகமெங்கும் சேர்ந்திட்ட பவக்கரைநீங்கிட
பெய்யும் மழையாய் அருள்தனைவேண்டி
படைத்தவனிடம் ஏந்தினோமே கை!

வாடிடும் ஏழைகட்கு வாரிவழங்கி
வல்லா னருளை மேலாய்ப்பெற்று
தேடிட சுவர்க்கம் செய்தன நல்லன
தரணியில் ரமழானை தரமாயேற்றே!

எனக்கே சொந்தமீதென்ற இறைக்கு
ஏந்தினோ முயர்வாய் அதனை-இன்று
மணந்திடும் பெருநாளீதில் – நாம்
மனங்களை இணைப்போமே ஒன்றாய்! 

இல்லாமையொழித்து இனிதுமகிழ்ந்து
இனத்தொடு ஒட்டி என்றுமிருந்திட
நில்லாத நிலத்தினின் நல்லனசெய்திட
நலமேந்தி வருக ஈகைத்திருநாளே!

அறையினிலடங்கி நிற்கும் வனிதைக்கும்
அழுதுநிற்கும் விதவைக்கும் – அன்பாய்
கறையிலா ஆடவர் கிடைத்திட இன்று
கருத்துக்கினிய பெருநாளே தூதேந்திவா!

உயர்ந்தோர் தாழ்ந்தோர் பேதம்நீக்கி
உத்தம நபியின் ஸுன்னாவையேற்று
கயமைநீக்கி நற்கருமம் செய்திட
கருணைமழை யேந்திவா பெருநாளே!

- மதுராப்புர கலைமகன் பைரூஸ்

நன்றி - தினக்குரல் 19-08-2012


OPINION'S:
Kalanenjan Shajahan 
நீங்கள் நல்ல சொற்களை சொத்தாய் பெற்றவர். 2012/08/16


ஏன் கவி எழுதுகிறேன்…?


ஏன்கவி எழுதுகிறாய் எனக்கேட்டவன்கு
ஏன்நான் கவியெழுதுகிறேன் என்றேன்பா
குன்றுபோல் நிமிர்ந்து நாளும்நிற்கும்
குவலயத்துத் தமிழ்ப்பற்றுப்பாவென்றேன்நான்
அன்னைதாதை பெருமை யுரைத்திட
அணைகடந்தேவரும் நற்றமிழில்நான்
இன்மணம் கமழ்ந்திட இதயம்நகைக்க
இனிதெனக் கவிபுனைகிறேன் என்றேன்பார்!

வலியார்முன்சென்று புயத்துசால்வைமாட்டி

வலியொடு கூனிக்குறுகி பாரைநோக்கும்
இல்லாரின் துன்பம் பாரிற்கோதிட நான்
இயன்று விழிநீர்கசிய கவியெழுதுகிறேன்
கிலியெதற்கு நாமெலாம் பாரிலொன்றே
கிள்ளியெறிக மடைமை யும்மில்என்று
புலிபோலும் சீறியெழுந்து என்னவர்க்காய்
பதட்டமின்றி யெழுதுகிறேன் நான்கவியே!

கோடிகள் கோடாய் வைத்துறங்கி

கருத்தோடு வருவார்க்கு பத்துகள்ஈந்து
பாடிடும் புள்ளிகளின் வாய்க்குமிளகீய
பைந்தமிழில் நானும் எழுதுகிறேன்
நாடிபிடித்து மெய்நோக்கி என்றமிழில்!
நலமாகத்தான் என்கிறார் கவிபார்த்து
ஆடிப்போய் அவர்கூற்றில் மயங்கி
ஆட்டங்காண் கவிதை செயவிலைநான்!

ஏன்கவிதை எழுதுகிறாய்நீ கேட்டிடும்

எடுப்பான கேள்விக்கு விடைசொல்வேன்!
ஊனின்றி வித்தைபால் காதலுற்று
ஊரெங்கும் கல்விப்பாலுக்காய் கையேந்தும்
என்னிரத்தங்கள் வடித்திடும் கண்ணீர்க்காய்
எழுதுகிறேன் மேடைதுடித்திடப் பேசிடும்
ஏற்றமிலா மாக்களை கொடுநகஎழுத்தால்கீறி
எட்டப்பன்நீயடா என்றிட எழுதுகிறேன்கவிநான்!

நாற்குண முனக்கேயுரித்து பதுங்குநீயென்று

நற்குணத்தொடுள நங்கையை கசக்கிப்பிழிந்து
பொற்பாதம் இவளதென்று பரத்தைநாடும்
பேடிகளின் கொட்டம்நீக்கிடத்தான் எழுதுகிறேன்
சுற்றமும் முற்றமும் போற்றுதற்காய் அல்லவே
சூழ்ந்துமாலை வருதற்கும் சால்வைசாத்துதற்கும்
குற்றம்காண் கவியெழுதேன் நான்காண்
குன்றிட்ட தீபமாய் எம்மவர்காண எழுதுகிறேன்!

பணமாலை புகழ்மாலை பெறுதற்கு

பைந்தமிழை கெட்டொழியேன்நான்
ஈனர்கள் செயல்கடிந்து இதமானநற்றமிழில்
இச்சைதரும் மெய்யீவேன் நாம்வாழ
குணத்தொடு என்றும் எம்மவர்நின்றிட
கனமிலா தாய்த்தமிழில் எனதானகவிவழியில்
பணத்தொடு மனிதம் பார்க்காமாந்தர்தம்
பைத்தியம் நீக்கிட கவியெழுதுகிறேன்நான்!

இல்முன்குந்தியே நின்றிடும் சோதரிகள்

இல்வருவான் எப்போ எனஏங்க தெரு
இல்முன்நின்று குலைக்கும் தரங்கெட்டார்
இரத்தம்வருங்கால் கழுத்துநெறுக்கிட
சொல்லெடுத்து உரைப்பாய் கவியெழுத
சொல்வாரிவனோ என்று? நகைப்பெனக்கு
சொல்க ஏன் எழுதுகிறாய் கவியென்பான்கு
சொரியாமல் முதுகு சொன்னேன்பாஇது!

மரபுமிலை புதுவதுமிலை உன்கவியில்

மரமண்டை யெழுதுகிறாய் ஏன்தான்?
கூரறிவாய் உரைப்பதாய் வைபவன்க்கு
நான் ஏன்எழுதுகிறேன் கவிசொன்னேன்பா!
பெரிதாகக் கவிபுனைய கூத்தனுமல்லன் 
பொரிதந்த நற்கவிஞன் காளமேகமுமல்லன்
ஏறிவருகின்ற சொல்லெடுத்து எனக்கான
என்றமிழில் சொல்வேன்கவி ஏன்என்பான்க்கு!

ஏனென்ற வினாதொடுத்து விடையுங்கண்டு

ஏதிலார் நெஞ்சத்தோடு வினாதொடுக்க
பன்னூறு கவிதரலாம் நலமாக நிலம்வாழ
பைந்தமிழின் வீசுபுகழ் தரணியோத
சொன்னேன் யான் இக்கவியில்பண்பொடு
சொலும் கவியெலாம் எனதானபாணியிதே!
கூன்நிமிர வழிசெய்வோம் நம்மவர்தம்
குழந்தைமனம் இன்புறவே ஏதும்செய்வாம்!

-
கலைமகன் பைரூஸ் 

நன்றி -

இலண்டன் தமிழ் வானொலி - வியாழன் கவிதை நேரம்
மெட்ரோ நிவ்ஸ் METRO NEWS FRIDAY EDITION 2012/09/07

புதன், 15 ஆகஸ்ட், 2012

மறைத்தழிநீ!


பெண்ணே!
மயக்கும் கண்ணில் 
காந்தத்தின் வலிமை காண்கிறேன், 
இதழின் அழகில்
பெண்மைகாக்கும்
தீயைக் காண்கிறேன்,
கூரிய பற்களில்
பகைவனைக் குதறும்
வீரம்காண்கிறேன்,
உந்தன் கூரிய நகங்களில்
பெண்மைகாக்கும்
ஆயுதம்காண்கிறேன்.
மென்மையான பெண்மையில்
ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லுதடீ பெண்ணே உன்னழகு!
மாற்றானின் பார்வையில் பதுமை
ஆனால் உனைக்காத்திட
உவமைசொல அறியேன் நானடீ!
கார்குழலாள்,
வருகின்ற பேய்களை மறைத்தழிநீ!

-கலைமகன் பைரூஸ்

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

போல


குழந்தை அழும் !
அழுவதால் நீ
குழந்தையாக முடியாது !

பூ புன்னகைக்கும் !
புன்னகைப்பதால் நீ
பூவாக முடியாது !

காற்று தழுவும் !
தழுவுவதால் நீ
காற்றாக முடியாது !

நதி ஓடும் !
ஓடுவதால் நீ
நதியாக முடியாது !

மழைத்துளி விழும் !
விழுவதால் நீ
மழைத்துளியாக முடியாது !

வானவில் வளையும் !
வளைவதால் நீ
வானவில்லாக முடியாது !

கம்பன் கவிசெய்தான் !
கவிசெய்வதால் நீ
கம்பனாக முடியாது !

மாதிரியின் முகமூடியில்
தன் முகவரி இழந்தவனே !

நில்!
சூரியன் தனை உள்வாங்கித்
தன் சுயம் இழக்காத
நிலவைப் பார் !

கவனி !
மாதிரியைப் படி
அதன் மாதிரி நீ
ஆகிவிடாதபடி !

செல் !
மாதிரியைத் தொடர்ந்து அல்ல !
மாதிரியின் பாதைகளில்
தொடர்ந்து...

போலச் செய்து
போலியாகி விடாதே !

மாதிரி
சூரிய ஒளிகீற்றுகள் தான் !
அதில்
உன் சுயமெனும்
கண்களை இழந்துவிடாதே !

மாதிரியை
உன் தோளில் வை !
மாதிரியின் தோளில்
நீ சவாரி செய்யாதே !
ஏனென்றால்
உன் சுவடுகள்
தெரியாமல் போய்விடும் !


- பாண்டூ

நான் நயந்த பலமுறை சுவைத்த நல்ல கவிதை (கலைமகன்)


சனி, 11 ஆகஸ்ட், 2012

ஏன் இன்னும் நனைகிறாய்?



அழகான மேனி அலங்காரமாய் இருக்க
அந்திப்பொழுதும் எப்பொழுதும் நீ
நிழல்தரும் வனப்போடு இருக்க
நீச்சலடிக்கின்றாய் இன்னும் நீரில்!

உடம்பென்ன ஆவதோ நீரில்மூழ்க
உயிர்க்கு என்ன ஆகுமோ இருக்க
படம்பிடிக்கும் நாகமும் மறையுமன்றோ
பட்டாம்பூச்சியாய் நீமட்டும் நனைகிறாயே?

கழுவுதற்கு “ஸர்ப்எக்ஸல்” இருக்க
கலக்கமேனோ எனக்கு என்கிறாயா?
உழுவன் களனியில் இருப்பதுபோலும்
உருமாறி நீஇருக்கிறாய் நனைந்தே!

கறைபடிந்த உன்னாடை ஒருபுறமிருக்க
கரைந்தே செல்லுது உடம்பு எப்படி?
முறையாக நீநீந்திக் குளித்திடு
முறையாக ஆடையைத் துவைத்திடு!

கவலை வேண்டாம் மகனே என்கிறாளோ
கண்ணுக்குள் பூசிக்கும் உன்னன்னை உனை
தேவலைதான் அவளிருக்க உனக்கேன்வதை
தெளிவாக வடிவாகத் தந்திடும் “ஸர்ப்எக்ஸல்”

உடம்பையும் தேற்றிடு நனைந்ததுபோதும்
உன்னை பைத்தியம் என்பர் நிலைகண்டு
திடவுறுதி வேண்டாமோ எல்லாம் செய்ய
தடம்புரண்டதுபோதும் தண்ணிநீக்கி நீவா!

சுத்தம் சுகம்தரும் என்பதற்கு நனைகிறாய்
சீருடையில் மாற்றம் செய்யலாம் அதனால்
சத்தம் போட்டுச் சொல்கிறாய் “ஸர்ப்எக்ஸலை”
சட்டென்றுவா வந்துரத்துச் சொல் அழகிதனால்என்று!

-கலைமகன் பைரூஸ்

கடிந்திடு சோம்பலை இளவல்நீ!



கடுமைகொண்ட தோளினாய் பாரில்நீ
கடமைசெய்ய ஆயிரமுண்டு தெளிவாய்
நடுக்கடலில் மூழ்கி முத்தாய்பணி
நட்டவேண்டாமோ தெளிநீ தெளி!

ஆயிர மாயிரம் கனவுகளுடன்நீ
அகிலமெங்கனும் சுற்றுகிறாய் பார்
தேய்ந்து செல்லும் பாதம்மட்டும்
தெளிந்திடு அதனில் விளக்கந்தான்!

விடலைப் பருவமது தாண்டிநீ
வித்தைகாட்டும் பருவம் கண்டனை
தேடலில் நாளும் நீஉயரு
தரணியி லுயர்மொழி உனதன்றோ?

நாட்டின் சொத்தே இளவலே!
நம்பிக்கைவை உன்னில் நானென்று
ஏட்டில் உன்பெயர் பதிவாகும்
ஏற்றம் கண்டிடும் படையன்றோ?

நாட்டின் கல்வி சிக்கலன்றோ
நினைத்திடின் நீயும் பேடியன்றோ
பாட்டுக்கள் புதுபடை நீயுயர
பெருமை கொள்ளும் நாடுமன்றோ!

ஆழச்சென்று ஆழியில் சென்று
அரிதான முத்தினைப் பெறுமாப்போல்
வீழச்செய்திடும் இடுக்கண் கண்டுழிள
வீழ்ந்திடதாதே – நீநிமிரு நீவாழ!

களிபடைத்த மொழியுடை இளவலே
கருத்தினில்வை உன்னாற்றல் மேலுயரும்
களிகொள்வாய் உன்னைப் பார்போற்ற
கடுமைகொண்ட தோளினாய் நீயெனும்போ!

இமாலயத்தை நீதொட ஏறுசிறுமலையாதி
இமயம் உன்கைக்குள் வந்துவிடும்பாரு!
விமானம் புதுபடை வளங்களுனக்குள்
வேண்டு மதற்கு உனக்குள்விருப்பு!

அக்கினிப் பிழம்பதை அங்கையில்நீகொள்
அக்கினியாவிது எனப் பாரில்நீசொல்
போக்கிரித் தனங்கள் உனக்குள்நாண
பேரும்புகழும் நீபெற உனைநம்பு!

முடியாத தேதுளது எனதிளவலேநீ
முயற்சியுடைத்தாயின் எலாம் பாதவருகே!
கடியாதே இயலாதென்றுநீ மட்டும்
கடிந்திடு சோம்பலை கழற்றிடதனை!

எல்லாமாம் என்னாலே என்ற
எடுப்பான மந்திரத்தை கைக்கொள்நீ
பொல்லாத கருமமதும் அங்கைபாரு!
பாருனைத் துதித்திட பாரைப்பாரு!

-கலைமகன் பைரூஸ்

நன்றி 
http://www.tamilmirror.lk/2012-04-05-07-07-32/46487-2012-08-11-12-10-21.html

--கருத்துரைகள்--

Seyed Hussain 
உங்களது தமிழில் பல விடயங்களை நான் பார்க்கின்றேன் .ஒன்று அதில் தமிழ் இருக்கிறது . அறிவும் பிரதிபலிக்கப்படுகிறது . உண்மையும் இருக்கிறது
நீங்கள் எழுதும் பொழுது ஆளுமையுடன் எழுதுகிறீர்கள் . இனி வேறென்ன தேவை..கலையும் கவிதையும் இலகுவாக வருவதில்லை . புலமையும்,
கூரறிவும்கொண்ட ஆத்மாவினால்தான் முடிகிறது.இதை இறைவன் உங்களுக்கு அன்பளித்த்ருக்கிறான் .உங்களது பணி தொடரவேண்டும் .

Suraiya Buhary
அனைத்து கவி வரிகளும் அருமை சகோதரா...! மேலும் உங்கள் கலை
பயணம் தொடர இறைவனிடம் வேண்டுகின்றேன்...!


Razana Manaf 
இளைஞர்களின் நாடியை பிடித்துப்பார்த்தது போல் இருக்கின்றது அத்தனையும் முத்தாய் இருக்கின்றது ஆனாலும் படிப்பவர்களுக்கு புரிதலில் கொஞ்சம் சிக்கல் இருக்கும் தூய தமிழ் வார்த்தைகளை பொறுக்கி கவிமாலையாக தொடுத்திருப்பதினால்...!! எல்லாவரிகளுக்கும் மகுடம் சூட்டுவதுபோல் உள்ளது இந்தவரிகள்...

//எல்லாமாம் என்னாலே என்ற
எடுப்பான மந்திரத்தை கைக்கொள்நீ
பொல்லாத கருமமதும் அங்கைபாரு!
பாருனைத் துதித்திட பாரைப்பாரு!//

என்னாலும் முடியும் என்பது தன்னம்பிக்கை 
என்னால் மட்டும்தான் முடியுமென்பது தலைக்கணம் 

ஆகவே, தலைக்கணத்தை விடுத்து தன்னம்பிக்கையை வளர்த்தெடுப்போம் பாரினில் நாமும் முதன்மை பெறுவோம்.


Ilakkiya Sahi 
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா !
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா !
என்ற பாரதி வரிகள் நினைவுக்கு வருகிறது கவிஜரே .


Jancy Caffoor
அழகுத் தமிழில் இளைஞனஞக்கு தன்னம்பிக்கையூட்டும் அழகான வரிகள்..........இன்றைய நவீன உலகில் எழும் வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்து மீள்வதற்கான வழிப்படுத்தல்கள் எழுத்துருவில் ஒட்டிக்கிடக்கின்றதிங்கே!

//முடியாத தேதுளது எனதிளவலேநீ
முயற்சியுடைத்தாயின் எலாம் பாதவருகே!
கடியாதே இயலாதென்றுநீ மட்டும்
கடிந்திடு சோம்பலை கழற்றிடதனை!//

முடியும் என்ற மனதின் அறைகூவலே மானசீக குரலாய் ஒலிக்கின்றதிங்கே.........

வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை.....சமூகத்தின் சிறந்த அங்கத்தவனாய அந்த இளவல் மாற்றமடைய, உங்கள் ஒவ்வொரு வரிகளும் தோளணைத்து புத்தி புகட்டுகின்றது ஆளுமையுடன் !

Vj Yogesh 
"அக்கினிப் பிழம்பதை அங்கையில்நீகொள்
அக்கினியாவிது எனப் பாரில்நீசொல்
போக்கிரித் தனங்கள் உனக்குள்நாண
பேரும்புகழும் நீபெற உனைநம்பு!" மிகவும் இரசித்தேன்.. வாழ்த்துக்கள்.



Thava Parames 

முடியாத தேதுளது எனதிளவலேநீ
முயற்சியுடைத்தாயின் எலாம் பாதவருகே!
கடியாதே இயலாதென்றுநீ மட்டும்
கடிந்திடு சோம்பலை கழற்றிடதனை!.......அருமையான ஒரு வழிகாட்டி கவிதையென்றே சொல்ல வேண்டும்