It கலைமகன் கவிதைகள்: இன்பக் களிப்பினிலே....!

வியாழன், 24 மே, 2012

இன்பக் களிப்பினிலே....!

பயின்றிடும் தோறும் பண்பினை வளர்த்திடும்
பகலவ னொளியாய் பாங்காய் நம்மொழி
உயர்ந்திட தமிழினம் உணர்வுடன் வாழ்ந்திட
உயரிய மொழியாய் எங்கள் தமிழ்மொழி! (2)

கனிந்திட வுளங்கள் கனிச்சுவை தந்திடும்
குறையிலா முத்தமிழ் ஏடுகொள் நம்மொழி
நனிமிகு சிலம்பும் மணியும் வளையலும்
நேராம் குண்டல முடைத்தாய் நம்மொழி!(2)

பொழிவுடன் விளங்கும் பலமுடன் திகழும்
பனிமலர் அன்னக் கோலத் தமிழ்மொழி
குழலிசை யெங்கனும் குவலயம் கண்டிட
கருத்துடன் திகழும் செம்மொழி எம்மொழி!

கலைகள் பற்பல பேராய்த் தந்திடும்
கனிமொழி எங்கள் கற்புடைத் தமிழ்மொழி
நிலையினிற் குன்றாய் நிமிர்ந்தே நின்றிடும்
நெஞ்சினி லின்பகடலென நற்றமிழ் மொழியே!(2)

என்றும் எம்மொழி எதிலும் எம்மொழி
எடுப்பாய்த் திகழ்வது வீறுகொள் தமிழ்மொழி
செம்புலமெங்கனும் தனித்தமிழ் காண்போம்
செழிப்புடன் இன்பக் களிப்பினில் யாமே!

தேனினும் உயரிய தீம்மொழிகண்டிட
தேகமெங்கனும் தமிழ்மொழி நின்றிட
கூனே இல்லாதெழுந்திட முடிந்திடும்
தமிழைக் கண்டேன் இன்பக் களிகொண்டேனே!(2)


-கலைமகன் பைரூஸ் நன்றி - இலண்டன் வானொலி (கவிதை நேரம்) 2012 - 05 - 24

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக