It கலைமகன் கவிதைகள்: எங்கே மனிதம்....? - கலைமகன் பைரூஸ்

திங்கள், 15 ஏப்ரல், 2013

எங்கே மனிதம்....? - கலைமகன் பைரூஸ்



தன் பிரபல்யத்துக்காய்
மனிதம் விற்கப்படுகிறது....
தன் மகிழ்ச்சிக்காய்
பிறர் அழுகுரல்
வீணையென இரசிக்கப்படுகிறது...

பிணந்தின்னிக் கழுகளும்
ஊளையிடும் நரிகளும்
நிறைந்த சாக்காட்டில்
புதுமையைக் காண்பதற்காய்
‘செல்’கையில்


குழந்தையின் அழுகுரலும்
நார்நாராய் கிழிக்கப்படுதலும்
ஆர அமர பதிவுசெய்யப்படுகிறது
தனக்குள் மகிழ்ச்சி அதில் என்பதால்!

ஒன்றுமட்டும் உண்மை
மனிதம் வாழாததால்
பதிவுக் கருவிகளில்
பதிவு மட்டுமே ஆனது....
காலத்தில் நிலைக்க.....
ஆனால்,
பதிந்தவன் பற்றி
பரமன் பார்வை வேறு....
இவன் மனிதக் கழுகு என....

ஆத்மாக்கள் உள்ளவர்கள்
மனிதம் துளியளவேனும்
கைக்கொண்டவர்கள்
சிந்தனைகளைத் தட்டும்....
தன்னைப் போல் உள்ள
ஆத்மாவைக் காக்க வேண்டுமென்று....

எழுத வெட்கிக்கிறேன்
உதவ முடியாமல் போனதற்கு....
மனதால் பிரார்த்திக்கின்றேன்....
‘கெவின் காட்டர்’
‘மனிதம்?’ என்பதை
பதிவுக்குள்ளாகி
‘பாவிமகன் நானென்று’ வெட்கித்ததற்கு...

-          -கலைமகன் பைரூஸ்  2013-04-15 8:14



   இதே கவிதையை மரபுவழி எப்படி அழகாய்ச் சொல்கிறார் பாருங்கள்...!

என்பொடு சதைபூச்சாய் உள்ளொடுங்கி உயிர்நின்ற
சிறுமி துயர் நோக்கான் கலைஒன்றே ஆர்வமாய்
வன்கழுகு வாய்கொத்தும் இரையென காத்திருக்கும்
ஏதம் தவிரான் இதயத்து ஈரம் துறந்தான்
ஏற்றம் தரும் இனிதாம் காண்போர் கருத்து கவரும்

எழிலாய் கனிந்திடும் விருது இப்படமென சொடிக்கினான்
எதோ அறம் கூற்றாய் அகம் தைக்க ஆழ் மனஉணர்வு
உயிர் நீக்கம் ஒன்றே கழுவாய் உன் வினைக்கென உந்த
உய்ந்தான் உயிரொடுக்கி வீழ்ந்தான் வெற்றாய்.!!
-பாஸ்கரன் ரங்கநாதன்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக