It கலைமகன் கவிதைகள்: கூசா தூக்கியது போதும்... உங்கள் வலிக்கு நான் ஏது செய்ய?

செவ்வாய், 15 அக்டோபர், 2019

கூசா தூக்கியது போதும்... உங்கள் வலிக்கு நான் ஏது செய்ய?



















ஆளுக்காள் கூசாதூக்கித் திரியும் ஆட்களே!
அயர்ந்து தூங்காது சொல்வதைக் கேளுங்கள்...
நாளுக்குநாள் எம்முதிரம் சிந்தியே உழைத்தோம்
நாட்டுக்கு எம்வரிகளையும் ஈந்தே யழிந்தோம்...

டும்டும்டும் எனவே வானுயர்கின்றன ஓலங்கள்
டும்டும்டும் என்தலைவன் இவனென்று 
ஆளுக்காள் டமாரம் அடித்து ஏதுபயன் கேளுங்கள்
தயவோடு சொல்கின்றேன் கூசா தூக்கியேதுபயன்?

சஜித் என்றும் கோத்தா அநுரவென்றும்
சிந்திக்காது நீங்கள் கூசா தூக்குகின்றீர்பாவம்
நாசுக்காகச் சொல்லவில்லை உங்கள் மூட்டுக்கள்
நன்றாக வலிக்கும் சிந்திக்காது நடந்தாற்றான்....

எங்கள் கைமூட்டில் இவனுக்கு என்னவென்று
என்னைச் சாடுவதில் ஏதுபயன் உங்கட்கு
உங்கள் கைமூட்டுக்கு மருந்துவாங்க
எங்கள் நாட்டு ஏழைகளின் உதிரந்தான் போகும்...

பசையை வாளிவாளியாகச் சுமந்தும் கைகடுக்க
பதாதைகளை தலைமேற் சுமந்தும் இக்கால்மட்டும்
நேசமான உங்கட்குக் கிட்டியதேது? சொல்லுங்கள்
நாமுண்டுவாழ நீதியான தேசமன்றோ தேவை!

நிறங்களைப் பற்றிப் பிடித்தது போதும்
நாட்டினுக்கு நேசமான நம்மவர்க்கு நேசமான
நல்லவரைத் தேர்ந்தெடுக்க உழைப்போம் நாம்
நிறங்கள் எலாம் வானுயரும்வரை மெத்தப்பேசும்...

நம்சிறுசுகள் நலமாகக் கல்விப்பால் அருந்துதற்கும்
நம்மிளையோர் நாளும் நற்றொழில் செய்வதற்கும்
எம்மூடகங்கள் அச்சமின்றி தொடர்ந் தெழுவதற்கும்
எம்கைகளைக் கோத்திடுவோம் கூசா தூக்காது...

உழைப்பாளின் வரிப்பணத்தைச் சுரண்டாமல்
உழைப்பாளியின் வியர்வையை வீணாக்காமல்
உழைப்பவனுக்கு முன்னுரிமைதர முன்வாருங்கள்
உழைக்காதவன் பின்சென்று அரோகரா பாடாமல்...

-கலைமகன் பைரூஸ்

நன்றி: இலங்கைநெற்
2019.10.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக