நாங்கள் ஆடைகள் எடுத்தோம்...புதுப்புது உணவுகளுக்காக
பொருட்கள் வாங்கினோம்..
உற்றார் உறவினருடன் உல்லாசமாய்
உலாவிவர ஆவன செய்தோம்...
எங்கள் இரத்த உறவுகள்
நாளும் இரத்தம் சிந்தி
உடலங்கள் கற்களுக்குள்ளும்
சிதைந்தும்
உடலங்கள் காணாமற் போயும்
உறவுகள் இழந்தும்
உறக்கங்கள் துறந்தும்
வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டு
இருந்தும் இல்லாமலிருக்கிறார்கள்...
அவர்களின் படங்கள்
அவர்களின் அவலங்கள்
ஈகைத் திருநாளில்
ஆனந்தத்திற்குப் பதிலாக
அழுகையைத்தான் தருகின்றது...
பிஞ்சு உள்ளங்கள்
கைகளில் பாத்திரங்கள்
ஏக்கங்கள்
சொந்த மண்ணுக்கான
ஏக்கங்கள்
ஒரே மொழி பேசுவோரின்
உதவிக் கரங்கள்
அவர்களின் குரல்கள்
எங்களுக்காக உயரவில்லையே
என்று கழுகுப் பார்வையில்...
இறைவா...
அந்த மண்ணின் மக்களை
உந்தன் அருமந்த அருளினால்
காப்பாற்றுவாயாக!
அபாபீல்களாய்
ஏதேனும் ஒன்றை அனுப்பி
அடாவடித்தனத்தை
பூண்டோடு அழிக்கவல்லவன்
நீயன்றி யாருளன் இறைவா!
தாயின் அன்பிலும்
ஆயிரம் மடங்கு
அன்பு கொண்டவன் நீயல்லவா?
உந்தன் அன்பினைக் காட்டிடு இறைவா!
- கலைமகன் பைரூஸ்
30.03.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக