It கலைமகன் கவிதைகள்: ஓடி விளையாடு

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஓடி விளையாடு

ஓடிவிளையாடு நீ - ஓய்ந்திருக்காது விளையாடு
ஒருநாள் முடிந்திடும் மூச்சினை யெண்ணாது
துடிதுடிப்பாய் விளையாடு! துடிதுடிப்பாய் ஆடு!
தூங்கியபின் ஆட்டமில்லை – எண்ணாது ஆடு!

கனவுகள் நிஜமாகுமென நினைத் தாடுகிறாய்!
கண்டவரையெலாம் கரண்டையின்கீழ் எடுத்திட
ஊனமனங்கொண்டாடுகிறாய் - நீயாடு நீயாடு!
உலகமுந்தன் பாடைதூக்கிடும் நாளெண்ணாதாடு!

யானுயர்ந்தவ னெனநினைந்தே உதைக்கின்றாய்நீ
யாவுமறிந்தவன் நிலையெண்ணா துதைக்கின்றாய்!
வானும்வசமாகும் விண்மீனும் கீரிடம்தரிக்கு முனக்கு
வாழ்க்கை – பார் ஏதெனநீ யுணருங்காலே! உதைநீ!

சாதிகளி லுயர்ந்தவன் நீயென்று உதைக்கின்றாய்!
சாதியென்ன சாதி உந்தனுக்குள் எங்கேயோகம்?
நீதியை நிலத்தினி னழித்திட உதைக்கின்றாய்நீ
நிலையிலா வாழ்வின் முடிவேதென அறியாதுநீ!

ஒற்றைப் பந்தின் வாழ்வன்னது வாழ்க்கை – அது
ஓய்ந்திடும்வேகமறியாது உதைத்தாடுகிறாய்!
இற்றைப்பொழுதில் உந்தனாட்டம் கண்டுசிரித்திட
இருக்கின்ற சாரார் எண்ணி யாடுகிறாய் –நீயாடு!

இழுத்தடிப்பதில் தப்பேது உனைப்பந்தாடுவார்தனை!
இழுத்தடிப்பதில் தப்பேது உனையிகழ்வார்தனை!
வீழ்ந்துமடிந்தாலும் ஆகும் வீணரை வீழ்த்திடஆடின்
வம்புக்கும் வீம்புக்குமாடின் நீகண்டதெலாம் பூச்சியமே!

-கலைமகன் பைரூஸ்
இலங்கை

நன்றி:
  • முத்துக்கமலம்
  • வார்ப்பு
  • ஒருநாள் ஒரு கவிதை
  • பூங்காவனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக