It கலைமகன் கவிதைகள்: வருக ஈகைத் திருநாளே!

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

வருக ஈகைத் திருநாளே!

திங்களொன்று நோன்பு நோற்று
தராவீஹ் தஸ்பீஹ் முறையாய்செய்து
இங்கிதமாய் சுற்றத்தொடு சேர்ந்தமர்ந்து
இனிதாய் இப்தார் செய்திட்டோமே!

அதிகாலை துயிலெழுந்து - தொழுது
அன்பாய்க்கூடி ஸஹர்செய்து - பின்
கதிமிகத்தந்திடும் ஸுப்ஹும் தொழுது
குர்ஆன் ஓதிட்டோமே திங்களிதில்!

 செய்ததவறுக்காய் தேம்பியழுது -நம்
தேகமெங்கும் சேர்ந்திட்ட பவக்கரைநீங்கிட
பெய்யும்மழையாய் அருள்தனைவேண்டி
படைத்தவனிடம் ஏந்தினோமே கை!

வாடிடும் ஏழைகட்கு வாரிவழங்கி
வல்லானருளை மேலாய்ப்பெற்று
தேடிட சுவர்க்கம் செய்தன நல்லன
தரணியில் ரமழானை தரமாயேற்றே!

எனக்கே சொந்தமீதென்ற இறைக்கு
ஏந்தினோ முயர்வாய் அதனை - நாம்
மனங்களை இணைப்போம் ஒன்றாய்!

இல்லாமையொழித்து இனிதுமகிழ்ந்து
இனத்தொடு ஒட்டி என்றுமிருந்திட
நில்லாத நிலத்தினின் நல்லனசெய்திட
நலமேந்தி வருக ஈகைத் திருநாளே!

அறையிலடங்கி நிற்கும் வனிதைக்கும்
அழுதுநிற்கும் விதவைக்கும் - அன்பாய்
கறையிலா ஆடவர் கிடைத்திட இன்று
கருத்துக்கினிய பெருநாளே தூதேந்திவா!

உயர்ந்தோர் தாழ்ந்தோர் பேதம்நீக்கி
உத்தமநபியின் ஸுன்னாவையேற்று
கயமைநீக்கி நற்கருமம் செய்திட
கருணைமழை பொழிந்துவா பெருநாளே!

நன்றி :
 ஒரு நாள் ஒரு கவிதை
வார்ப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக