It கலைமகன் கவிதைகள்: உதிர்ந்தது ஒரு பூ!

ஞாயிறு, 22 மார்ச், 2020

உதிர்ந்தது ஒரு பூ!

ஜனனியில் கால்பதித்தபோது
அங்கு நானும் நீயும்
உல்லாசமாக நின்றோம்...
எனக்கான மேசைப் பக்கமாய்
நீயும் வந்தமர்ந்து
இலக்கியம் பற்றி
ஏற இறங்கப் பேசினாய்...
கடைக்குட்டியாகவே
அன்றிருந்தேன் நான்...
பத்திரிகை பற்றி
ஏதும் அறியாத பால்ய பருவம்
தேடலில் ஈடுபடவே
சதாவும் மனம் விரும்பும்
காலமது...
மேமன் சமூகத்து
நீயோ அப்துல் கலாமாய்

திரைக்குள் இருந்தவற்றை
திறம்படவே எழுதித் தள்ளினாய்
வாசகர்பால் பெருமதிப்பு
ஜனனிக்கு வருதற்கு
வழிகோலினாய்...
குப்பைப் பத்திரிகை என்று
சிலர் முனங்கியபோது
உன்னாலும் என்னாலும்
தூசுதட்டப்பட்டன...
உன்னால்தான் நானும்
துடைப்பத்தைக் கையிலேந்தினேன்..
மாணாக்கர்க்கான ஆக்கம்
அரிவையர் அரங்கம்
சிறுகதைச் செப்பனிடல்
என்பாற்பட
உன்பாடே மிகுதமாய் நின்றது...
விழாக்களில் அடிக்கடி சந்தித்தோம்..
விலாவாரியாய் விலா பிடித்தே
அளந்து பேசினோம்...
வகவத்திலும் சந்தித்தோம்...
வரிசையாகவே நின்றன
உன் உறவுதான்...
ஆறாம் விரலை நீட்டி
நிமிர்த்தினாய்
உனக்கென தனிவட்டம்
தானாய் அமைந்தது...
உன்னை நீ
திரைநிலவன் என்றுதான்
சொல்லிநின்றாய்...
நீ பல்கலை என்பதை
இலக்கிய உலகு நன்கறியும்...
புதிய பூக்களைத் தந்தவனே
நீ உதிர்ந்தாய்...
கவலைகளைச் சுமக்கவைத்து...
உலகின் பேரதிர்வுகள் பலகண்டு...
இறையிடம் நீசென்றாய்
மீட்சிக்காய் இறைஞ்சுகிறேன்...
உன்மதிவதனம் ஏன் உயரமுந்தான்
எந்நேரமும எமக்குள் காட்சிதரும்...
கலை என்று எனை நவிலும்
நவாஸ் நானா,
உன் பிழைகள் பொறுக்கப்பட்டு
உயரிய சுவனத்தில் நுழைய
உயரிய இறை அருள்புரியட்டும்!
-மதுராப்புர,
கலைமகன் பைரூஸ் (கலை)

(பிரபல ஊடகவியலாளரும், எழுத்தாளரும், பன்முக ஆளுமையுமான இன்று (22.03.2020) இறையடி சேர்ந்த நண்பர் 'திரைநிலவன்' நவாஸ் நானாவின் நினைவேந்தி எழுதியது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக