It கலைமகன் கவிதைகள்: கதறும் ஓர் ஆன்மா! - பேருவளை றபீக் மொஹிடீன்

செவ்வாய், 1 நவம்பர், 2022

கதறும் ஓர் ஆன்மா! - பேருவளை றபீக் மொஹிடீன்

 

எனக்குள் தொலைந்துபோன

 என் நிம்மதியைத் 

தேடியலைகிறேன்.....


காலமும் கழிகிறது

மரண வலியோடு....

வாழ்வோ தொடர்கிறது....


கரைந்துபோன நாட்களுக்காய் 

கதறுகிறது ஆன்மா...

உறைந்துபோன நிலையில்

குற்றுயிராய்க் கிடக்கிறது

கல்புக்குள்ளிருக்கும் கலிமா...


உறக்கமில்லாமல் தவித்த 

இரக்கமற்ற இரவுகளில்

தவறவிட்ட என் தஹஜ்ஜுத்

விழிநீராய் வழிகிறது...


இறைவனை 

நினைக்க மறந்த 

என் தொழுகையின் ரூஹானிய்யத் 

கனவுகளிலும் கறுப்பு நிறமாய்

கண்முன்னே தெரிகிறது


ஓத மறந்த அல்குர்ஆன்

நெஞ்சுக்குள்  ஆணியாய்

ஓங்கி அறைகிறது


அதுவரை  உச்சரிக்காத 

தூய தஸ்பீஹ்கள்

என் மரணத் தறுவாயில் 

என்னை வழிகூட்டிப் போகின்றன


என் கண்களின் ஓரம் 

கசியும் நேரம்

வார்த்தைகள் சோகம் சுமந்து

மௌன மொழிகளால்...

இறைவனுக்கு நான் 

எழுதிய கடிதங்கள்...

முகவரி தொலைத்து

விடை தெரியா வினாவோடு....

இன்னும் அவன் பாதத்தின் கீழே 

பணிந்து ஸுஜூது செய்து அழுகிறது...


நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி ஆசிரியரும் களுத்துறை வலய தமிழ் மொழிப்பாட வளவாளரும் 'தமிழ்மொழி ஆசிரியர்கள்' குழுமத்தின் நிறுவனருமான திருமிகு. பேருவளை றபீக் மொஹிடீன் அவர்களது கவிதை இது. 


1 கருத்து:

  1. *பேருவளை றபீக் மொஹிடீன் கவிதைகள்*

    ******************************
    *ஆன்மாவின் பயணம் 2*

    ******************************

    எனதான வாழ்வின் வலி
    இன்னும் என் உயிரோடு
    உரசிக்கொண்டுதான் இருக்கிறது...
    வாழ்தல் கடினமானது...
    சிரிக்க மறந்த பொழுதுகளில்தான் உணர முடிகின்றது...

    மரணத்தை நேசிக்கும் அளவுக்கு இரசிக்க முடியாத
    வாழ்வியல் இன்பங்கள்
    மீட்டும் துன்ப வீணை
    இதய நரம்புகளின் காதுகளுக்குள் குற்றுயிராய் வலிக்கிறது...

    எத்தனை பேர்
    பக்கத்தில் இருந்தாலும்
    யாருக்கும் தெரியாமல்
    எனக்குள் மட்டுமே
    நான் கூறிக்கொள்ளும் ஷஹாதத் கலிமாவும் இஸ்திஃபாரும்
    எனக்கு துணை நிற்கும்
    என்ற நம்பிக்கையில்
    படைத்தவன் முன் மண்டியிடுகிறேன்


    தூங்கச் செல்கின்றபோதும்...
    தூங்கி எழுகின்றபோதும்...
    அதன் பின்னரும்...
    நான் அடிக்கடி செய்து கொள்கின்ற
    வுழூவும் தஸ்பீஹும்
    அன்பாளனின் முன்னிலையில்
    என்னை தூய்மைப்படுத்தும்
    என்ற நம்பிக்கையில்
    என் வாழ்வுப் பயணம்
    கழிகிறது

    முன்னாலும்... பின்னாலும்...
    வலதாலும்... இடதாலும்...
    மேலும்... கீழும்...
    என்னைப் பாதுகாத்துக் கொண்டு
    பின்தொடர்வதெல்லாம்
    தக்க நேரம் வரும்போது
    என் உயிர் எடுக்கத்தானே
    என்ற எண்ணம் மேலிடுகின்றபோது உள்ளம் ஊமையாகி தூய்மையாகிறது

    எனது கபுரில் நான்...
    நிரந்தரமாக... நிம்மதியாக.. உறங்க தியாகம் செய்யும் இரவு நேரத்தின் நொடிகள் பிரகாசமாகத் தெரிகின்றன
    அல்குர்ஆனிய வரிகள்
    என் மனதை மாளிகையாக்குகிறது
    எத்தனை வருடங்கள்...
    எத்தனை நாட்கள்...
    இன்னும் நாம் யாரும்
    36500 நாட்கள் வாழப்போவதில்லை...

    என்னைப் படைத்தவனே!
    வாழ்வு முழுவதும்
    உனதான சிந்தனைகள் மட்டுமே
    என் மன நினைவில் வழிந்தோட
    இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறேன்...


    *RAFEEK MOHIDEEN* (B.A. Hons), PGDE.

    பதிலளிநீக்கு