It கலைமகன் கவிதைகள்: ஓர் ஆன்மாவின் கதறல் 2 - பேருவளை றபீக் மொஹிடீன்

வியாழன், 30 மார்ச், 2023

ஓர் ஆன்மாவின் கதறல் 2 - பேருவளை றபீக் மொஹிடீன்

 


                        (2)

எனதான வாழ்வின் வலி

 இன்னும் என் உயிரோடு

 உரசிக்கொண்டுதான் இருக்கிறது...

வாழ்தல்  கடினமானது...

 சிரிக்க மறந்த பொழுதுகளில்தான் 

உணர முடிகின்றது...

 

 மரணத்தை நேசிக்கும் அளவுக்கு 

இரசிக்க முடியாத

வாழ்வியல் இன்பங்கள்

மீட்டும் துன்ப வீணை

இதய நரம்புகளின் காதுகளுக்குள் 

குற்றுயிராய் வலிக்கிறது...

 

எத்தனை பேர்

பக்கத்தில் இருந்தாலும்

யாருக்கும் தெரியாமல்

எனக்குள் மட்டுமே

நான்  கூறிக்கொள்ளும் 

ஷஹாதத் கலிமாவும் இஸ்திஃபாரும்

எனக்கு துணை நிற்கும்

என்ற நம்பிக்கையில்

படைத்தவன் முன் மண்டியிடுகிறேன் 

 

தூங்கச் செல்கின்றபோதும்...

தூங்கி எழுகின்றபோதும்...

அதன் பின்னரும்...

 நான் அடிக்கடி செய்து கொள்கின்ற

வுழூவும் தஸ்பீஹும்

அன்பாளனின் முன்னிலையில்

என்னை தூய்மைப்படுத்தும்

என்ற நம்பிக்கையில்

என் வாழ்வுப் பயணம்

கழிகிறது.

 

முன்னாலும்... பின்னாலும்...

வலதாலும்... இடதாலும்...

மேலும்... கீழும்...

என்னைப் பாதுகாத்துக் கொண்டு

 பின்தொடர்வதெல்லாம்

 தக்க நேரம் வரும்போது

என் உயிர் எடுக்கத்தானே

என்ற எண்ணம் மேலிடுகின்றபோது

உள்ளம் ஊமையாகி தூய்மையாகிறது

 

எனது கபுரில் நான்...

நிரந்தரமாக... நிம்மதியாக..  உறங்க

தியாகம் செய்யும் இரவு நேரத்தின் 

நொடிகள் பிரகாசமாகத் தெரிகின்றன

அல்குர்ஆனிய வரிகள்

என் மனதை மாளிகையாக்குகிறது

எத்தனை வருடங்கள்...

எத்தனை நாட்கள்...

இன்னும் நாம் யாரும்

36500 நாட்கள் வாழப்போவதில்லை...

 

என்னைப் படைத்தவனே!

வாழ்வு முழுவதும்

உனதான சிந்தனைகள் மட்டுமே

என் மன நினைவில் வழிந்தோட

இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறேன்...


-பேருவளை றபீக் மொஹிடீன் 

(RAFEEK MOHIDEEN (B.A. Hons), PGDE.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக