It கலைமகன் கவிதைகள்: வீண் சாதிகள் ஓதிடும் பூதங்களே! - பஸ்ரியா மன்ஸில், தெல்தோட்டை

வெள்ளி, 21 ஜூலை, 2023

வீண் சாதிகள் ஓதிடும் பூதங்களே! - பஸ்ரியா மன்ஸில், தெல்தோட்டை


பாரத நாடென்னும் போதினிலே -தேள்

வேருடன் கொட்டுது காதினிலே
நீதிகள் மீறிடும் சூதினிலே இனி
நாறிடும் பாரதம் தோதினிலே
விண்மதி ஆயிரம் அனுப்பியென்ன -அங்கே
நன்மதி தப்பிய மாந்தருண்டேல்
நற்கதி வேதங்கள் ஓதியென்ன -பெண்ணை
நிர்க்கதியாக்கிடும் பேய்களுண்டேல்
வீண் சாதிகள் ஓதிடும் பூதங்களே
கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்களே
ஆணாதிக்கம் மேவிய வாதங்களே உம்மால்
ஆயிரம் ஆயிரம் பேதங்களே
பாரதி கண்ட நிமிர் நடைப் பெண்டிர்
இன்னும் வீதியில் நின்று உழல்வது கண்டீர்
துச்சாதனன் தம்பிகள் நாட்டினைத் தின்றீர்
கூச்சமேயின்றி பெண்மையைக் கொன்றீர்
நாய்களும் நரிகளும் வெட்கிடுமே
இந்தப் பேய்களின் ஈனச் செயல்கள் கண்டால்
தாயெனப் பரிவுடன் பார்த்தாரிலர் -ஐயோ
மாய்த்தனர் கற்பைப் புலையர் சிலர்
இலக்கியம் ஆயிரம் தோன்றிய மண்
இன்று இலக்கணம் கெட்டே மாளுது காண்
வேதங்கள் தோன்றிய இந்திய மண் அங்கே
சாதிகள் நின்று நீதி கொல்வது ஏன்?
மனிதனைப்போலே புலையனுண்டோ -பூமியின்
புனிதம் குழைக்கும் கயவனுண்டோ
குணம்தான் குறைந்த இனத்தவனே -மனிதன்
உலகின் கண்ணே இழிந்தவனே
கூட்டமாய்ப் பெண்களைச் சீரழிக்க -நேற்று
ஓட்டமாய்ச் ஓடிய ஆண்களு்ள்ளே
தன் தங்கை தமக்கையும் நினைவிலையோ?
தன் தாயும் நினைவில் வரவில்லையோ?
அன்பு மரித்த பின்னர் வெறும்
எண்பு போர்த்துடல் வேலையுண்டோ?
திரௌபதி மானங்காக்க தவறிய மண்
வெறும் மங்கைகள் மானத்தைக் காத்திடுமோ?

-பஸ்ரியா மன்ஸில், தெல்தோட்டை
21.07.2023

https://youtu.be/PdVaP7r2ZW8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக