அப்பா என்ற ஒளி அணைந்திட,
அம்மா என்ற கண் நீரால் மூழ்கிட,
உணவின் வாசமின்றி உழலும்
உயிர்கள் – குழந்தை முகங்கள்!
சூரியன் காய்ந்தாலும் சிரிக்கவில்லை,
சந்திரன் வந்தாலும் மினுக்கவில்லை,
பொம்மை என்பதாய் கல்லைக் கொட்டி,
பசி என்பதைக் காற்றில் மறைத்துக் கொண்டது.
அப்பா நிழல் எரிந்த காற்றில்,
அம்மா வலி உலர்ந்த கண்ணில்,
சிறு விரல்கள் பசியைத் தழுவி
சின்ன வயது கனவுகள் கலைந்தது.
வானம் காயம், பூமி கல்லாய்,
வாடும் கண்கள் நாளை தேடிக்,
இரக்கம் சொன்னோர் எங்கும் இல்லா
இளமை இதழ்கள் காய்ந்து போனது.
அழுகையின் ஓசை தூக்கமின்றி,
அசைவற்ற சுவர்களில் சிக்கித் துடிக்கும்,
“காஸா” எனும் பெயரில் கூட
கண்ணீர் தான் அரசாகி விட்டது!
இரக்கமில்லா உலகமே!
இவர்களின் பசியை யார் கேட்பது?
இவர்களின் நம்பிக்கையை யார் காப்பது?
சிறு உள்ளங்களில் சுருங்கும் நம்பிக்கை –
சிறைபட்ட புறாவாய் துடிக்கிறது.
✍️ - கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக