It கலைமகன் கவிதைகள்: நடக்கிறது ஒரு பயணம்!

திங்கள், 6 செப்டம்பர், 2010

நடக்கிறது ஒரு பயணம்!



நாளொன்று புலர்கிறது
நாளைய விடிவுக்காக....
நிறைந்த மனதோடு
நடக்கிறது ஒரு பயணம்!
ஆயின்...

தட்டிப் பறிப்பதற்காய்
அங்கொரு காகம்
அண்ணாந்து பார்க்கிறது!

அழுக்குண்ணிச் சிந்தனையோடு
பிணந்தின்னும் கழுகுகள்
நாற்சந்திகளிலும்
புயல்வீச்சோடு பறக்கிறது!

கடித்துக்குதறும்
ஓநாய்கள்
அலைந்து திரிகின்றன
பிணமாக்கி மகிழ்ந்திட!
ஆயின்...
நடக்கிறது ஒரு பயணம்!

தட்டுத் தடுமாறியும்
தடைகள் தாண்டியும்
முச்சந்தி முட்களைக் கடந்தும்
தன் பிம்பத்தை
காணும் இடமெலாம்
நிழலாய்க் கண்டும்
களிப்புற்று மகிழ்கிறது உள்ளம்!

கறுப்பஞ்சாறாய் சுவைத்து
கருவேப்பிலையாய் ஒதுக்கும்
கேடுகெட்ட செயல்கண்டு
பிறந்ததேனோ
இத்தரையில் என
அடிமனது வினாதொடுக்க
நடக்கிறது ஒரு பயணம்!

அங்கு
மேடைகள் போட்டு
மத்தளம் கொட்டி
‘சமுதாயம்’ உரக்கப்பேசுகிறது!
அரவணைக்கவும்
ஆரத் தழுவவும் அழைக்கிறது!
அரங்கம்
பேரொலிக்கு  அதிர்கிறது
இதைக் காணக்கொடுத்தன
விழிகள் என
நடக்கிறது ஒரு பயணம்!

நடுவழியே
நேத்திரங்கள்
குத்திநிற்கின்றன!
காசற்ற பிச்சைப்பாத்திரம்
வஸ்திரமற்ற உடம்பு
இவற்றோடு
பிணமொன்று
மணம்வீச
காகமும் கழுகும்
ஓநாயும்
பெருமனதுடன் அங்கே!
பேரிரைச்சல் தாங்கவியலாது
மீண்டும்
நடக்கிறது ஒரு பயணம்!

இடைநடுவே
சந்தனப்பாடை சுற்றி
பெருங்கூட்டம் ஓலமிட
மானுடனின் நிலைசொல்லி
நடக்கிறது ஒரு பயணம்
தடுக்கிறது அப்பயணம்!
மேலும் வழிசெல்லாது
தடுக்கிறது அப்பயணம்!!


நன்றி:
# வார்ப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக