It கலைமகன் கவிதைகள்: எனை வைத்து நகைச்சுவை விருந்து படைத்தார் பாருங்கள்!

வெள்ளி, 1 நவம்பர், 2013

எனை வைத்து நகைச்சுவை விருந்து படைத்தார் பாருங்கள்!

என்னாசான் இயற்றமிழ் வித்தகர் மர்ஹும் வித்துவான் எம்.ஏ. ரஹ்மான் அவர்கள், நவமணி வாரப் பத்திரிகையில் 2001 - 09 - 30 இல் எனையும், கல்முனைக் கலீலையும் உவமித்து நகைச்சுவை விருந்து - 01  படைத்திருந்தார்.

என் ஆக்கங்கள் பத்திரப்படுத்தப்படும் ஏட்டில், அதைக் காணுங்காலையெலாம் எனையறியாமலேயே வருகிறது எனக்குள் சிரிப்பொலி....!



இப்படியெழுதியிருந்தார் அவர் -

நகைச்சுவை விருந்து 01
----------------------------------
மதுராப்புர மன்னன் பாண்டியன் பைரூஸ் பட்டத்து யானைமீது பவனி வருகிறான். பேரிகை, சல்லிகை, மத்தளம், கின்னரம், டக்கா, டங்கா, பம்பை, முசுடு, கொம்பு, குழல் என்பன இசைக்க பட்டத்து யானை இராஜநடை இட்டு வருகிறது.

பாண்டியன் பைரூஸ் கற்றறிந்த கல்விமான். புலவருக்கு பொற்கிழி வழங்கும் புரவலன். கலைமகள் கடாட்சம் அவன் பூ முகத்தில் பொலிகிறது. சொற்போர் புரிந்து பெற்ற விழுப்புண்கள் அவன் திறந்த மேலுடம்பில் தெரிகின்றன.

வழமையாக அவன் பவனி வரும்போதெல்லாம் ஆசியா உம்மா வந்து நிற்பாள். அவள் கல்முனைக் கலீல் பெற்றெடுத்த கன்னி. கட்டிக்கரும்பு. அழகுப் பெட்டகம். அசைந்தாடும் மயில். கிள்ளை பேசும் கூவும் மொழியாள் குயிலாள்.

அன்றும் அவள் வந்தாள். அவளுக்கு அவன் மீது அடங்காத கைக்கிளை. இப்படியே மகள் ஓடி ஓடி வந்தால் அவள் எப்படி படிப்பாள்? எவ்வாறு படுப்பாள்? என்றெல்லாம் எண்ணி எண்ணி மகள் பின்னால் ஓடி வந்தாள் உம்மா பாமிதா பேகம். பயந்து போனாள்.

மகளை திடீர் என்று பிடித்து வீட்டின் உள்ளே தள்ளி படீர் என்று கதவை அடைத்தாள். நிம்மதி மூச்சும் விட்டாள். ஆனால்?

அது என்ன? .... சிரிப்பொலி கேட்கிறதே. யாருடைய சிரிப்பு அது? மகள் தான் சிரிக்கிறாள். ... ஏன்? பாண்டியன் பைரூஸை அடைபட்ட வீட்டினுள் இருந்து கொண்டே பார்க்கிறாள் எப்படி? கதவை பூட்டுவதற்கு சாவித்துவாரம் வைப்பார்களே, அந்த ஓட்டை வழியாக. பாமிதா உம்மா மயங்கி வீழ்ந்தாள்.

“காப்படங் கென்று அன்னை கடிமனையிற் செறித்து
யாப்படங்க ஓடியடைத்தபின் - மாக்கடுங்கோன்
நன்னலங் காண கதவம் துளை தொட்டார்க்கு
என்னைகொல் கைம்மா றினி“

(முத்தொள்ளாயிரம்)

என்ன உங்களுக்கும் சிரிப்பு வருகின்றதா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக