It கலைமகன் கவிதைகள்: வழுத்தினேன் அகவையறு பத்துநான்கில்!

சனி, 6 ஆகஸ்ட், 2016

வழுத்தினேன் அகவையறு பத்துநான்கில்!

குருவெந்தன் நாகேசுவரன் அகவையறு பத்துநான்கில்
காலடி யூன்றிட்ட விடயந்தானறிந்தேன் - அவர்
திருமுகமென்னின் னென்றைக்கும் நிலைக்கும் - அவர்
திருக்குணங்கள் தானும் என்றும் நிலைக்கும்!

பண்பான நல்லியலார் நாகேசுவர னாசான்
பணிவான குணங்குடிதான் நாகேசுர னையா
இன்முகத்தொடு கல்விதரும் பங்கே தனியழகு

இதயத்து ஒட்டிடுவார் என்றுந்தான் சீடரிடத்து!

கணீரென்ற குரலினின் நல்லிலக்கியந் தருவார்
கண்ணாய்த்தான் காண்கிறார் நற்றமிழைத் தருவார்
கணீரென்ற குரல் இக்கணமும் என்னிதயத்தொட்டி
கைகளேந்துகின்றன அவர் நெடுநாள் வையத்திருக்க…

மதங்களை மதிக்கும் மாமனிதரிவர் நாகேசுவரனார்
மதித்திட்டார் என்மறையை ஏத்திட்டார் எனையும்
பேதங்காணா தவர் தன்மதத்தை உச்சிமேற்கொண்டு
போதித்திடுவார் கைகள்கட்டி கேட்டுவம் நற்பதந்தான்!

பொதிகை மலையெழுந்த நற்றமிழை யுயர்த்தி
போதிக்கும் நம்மாசான் நற்றமிழன் நாகேசுவரனையா
பதியீதில் பன்னூல்கள் பலவும் தந்து
பைந்தமிழ்க்கு மேலும் பணியீய வழுத்தினேனின்று!

-தமிழன்புன், கலைமகன் பைரூஸ்
(தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி கலந்துகொண்ட மாணாக்கன்)

06.08.2016

(என்னாசான் பேராசிரியர் கனகசபாபதி நாகேசுவரன் அவர்களின் பிறந்தநாள் இன்று (ஆவணி எட்டாம் நாள்). அவருக்காக எழுதப்பட்ட கவிதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக