It கலைமகன் கவிதைகள்: மார்க்கம் என்ன?

புதன், 17 ஆகஸ்ட், 2016

மார்க்கம் என்ன?

நீள்வான் மதியருக்கன் அண்டமுகடும்
நிற்பன நில்லாதன அனைத்தும் படைத்து
சூழ்புவியில் சிறந்த உயிராய் மனுக்குலம்
தனை யியற்றிய இறையொருவனை போற்றி!
கவிவாணர் குலவோர் சூழ்ந்து நிற்க
கவிமர பறியாயான் கவிபாட வந்துற்றேன்
கவிதன்னில் கவியிவன் கொம்பரேறி கவிபாட
குறைகளைந்து நிறைகாண்பீர் தோழமைகாள்!

மார்க்கம் மார்க்கமென்று மார்க்கமறியா மானுடன்
மண்ணினின் பற்பல இயற்றுகிறான் - அவன்
மார்க்கச் சீரியதெதுவென அறியாதே தடுமாறுகிறான்
மடைமையில் வீழ்கின்றான் யானெனும் போதையிலே
ஐம்புலன்களும் செயலற்றுப் போயினவே - இவன்
ஐந்தறிவு உயிரலவே சத்தியம் அறியாதிருக்கவே
அம்பாகத் தைக்கும் வார்த்தைகள் கக்குகிறான்
அரிமாக்கள் நாமென்று துள்ளுகின்றனன் வீம்பாலே!
கரியதும் பரியதும் மேனரியதும் செந்நீரொன்றலவோ?
கயமைவளர்த்துச் சாலவும் அடாதன செய்கின்றான்
பேரிகைள் பற்பல அடித்தாலும் விண்ணினின்
பாதை திரிந்தாலும் செந்நீர் மனுக்குலத்தொன்றன்றோ?
மீழாத்தூக்கம் வருமட்டும் மண்ணினின் ஆட்டம்
மாளாதோ? மனுக்குலம் ஒன்றென் றரையானோ
வீழாத அகம்பாவம் அடங்காதோ - இத்தரைமீது
விடியல்தோன்றிட வழிவகை சாலவும் செய்யானோ?
ஒருதுளி விந்ததனால் மனுக்குலம் என்றாகி
ஒருநூறு விந்தைகள் செய்கின்றான் - அவன்
இறந்ததன்பின் இரத்தந்தான் உயிர்த்தெழுமோ
இறவாத பணிகளன்றோ இப்புவிமீது நிற்கும்
இரத்தினத்தீவிதில் இரத்தந்தான் ஆறாய்ஓடாமல்
இத்தரையினின் எலோரும் ஒன்றென்றுபாட நாம்
இதயசுத்தியன்றோ இன்றுநம் தேவை - அது
நித்திரையினின் வாராதே பகற்கனவில் வாராதே
நித்திலத்து “நாமெலாம்” ஒன்றென வருமன்றோ?
தன்னினம் மட்டும் வாழ்தற்காய் ஆவனபல
தான் எனும் ஆணவத்தில் உச்சாணி ஏற்றுகிறான்
மண்புழுவேதான் பாந்தளாய் எண்ணி ஆற்றுகிறான்
மனிதம் சிறுமீன் சினையினும் நுண்ணிதேயிவன்!
தானெனும் மமதை தலைகால் சீராய்க்காட்டாது
தரணியினின் சீரிய மார்க்கம் ஏதெனக் காட்டாது
நாமெனும் மந்திரத்தை நாற்றிசையும் ஓதவே
நாமெலாம் நல்மார்க்கம் கொண்டவராவோமே!
கூடுவிட்டு ஆவிபிரிந்தன்பின் நாமெலாம் ஆடிடும்
கூத்துக்கள்தான் என்ன? நாற்றமெடுக்கும் பிணமே
நீடுபுகழ் நிலைக்க வேண்டுமென்றால் - நீள்புவியில்
நல்லன வியற்றாமல் மார்க்கமென்ன எனின் சரியோ?

-கலைமகன் பைரூஸ்

(இன்று 17.08.2016 வகவ பௌர்ணமிக் கவியரங்கு கொழும்பு - குணசிங்கபுர அல்-ஹிக்மா வித்தியாலத்தில் நடைபெற்றபோது, அங்கு என்னால் முன்வைக்கப்பட்ட கவிதை....)




 வலம்புரியின் மேடையிலே
கவிதை பாட 
இனம்புரியா அன்புடனே

ஓடிவந்தாய்
பலகாத தூரத்தை யேதாண்டி
பலங் கொண்ட 
கவிதை நீ
கொண்டு வந்தாய்

வளங்கொண்ட பாவலனே
கலைமகனே
மரபுக்குள் உனக்கிருக்கும்
ஆற்றலையே
வரம்புக்குள்ளே நின்று
நிரூபித்தாய்
தரம்பெற்ற கவிஞனென
மட்டுமல்ல
வரம்பெற்ற கவிஞனென்றும்
சொல்லி வைத்தாய்

மீண்டும் நீ மீண்டும் நீ
வரவேண்டும் 
பல வெற்றிப்படிகள்
தாண்டும் 
கவிதைகள் 
தரவேண்டும் 

வாழ்த்துகள்!
18.08.2016



Baskaran Ranganathan 

மணியான கவிதை மாற்ற றியா செம்பொன் எனவே சாற்றினீர்
தேனென சீரிய கருத்துகள் பொதிந்தே அமைத்தித்த பாவாம்
ஊணுயிர் பிறவியின் மக்கள் தாழ்வும் உயர்பெருங் கருணை
முழுமுதற் செம்பொருள் சால்பும் முறையாய் உரைத்தனை
எழுதிய இக்கவியில் அவையடக்கமாய் தனி வணக்கம் நன்றே
உலகே ஓரினமாய் வேற்றுமைகள் தவிர்க்கும் நிலை கூறியே
இலதாய் பகைமைகள் தீர்ந்திட பலரும் வாழக் கூறினாய்
விந்தொன்றால் ஓராயிரம் விந்துகள் நல்ல சொல்லாடல்
ந ந்தா எழிலே நற்சொற் சுவைதான் நன்றே பொழிந்தனை
பேரிறை முன் ஒருசிறு தூசுதான் என்றிட தன்முனைப்பு
வேரின்றி வீழ்ந்துபட உலகம் அணைக்கும் வாழ்விங்கு
மலரும் வழிதனை நன்றே சீர்பட உரைத்தனை
இலராகத் தீயோர் மாய நல்லோர் நலம் சேர்க்கும்
பொதுமை நெறி பொழியும் பாநலம் நனிநன்று
வாழ்த்துகள் வளமாய் கலைமகன் வாழ்ந்திட நன்றே.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக