It கலைமகன் கவிதைகள்: எனை உச்சாணியில் ஏத்திய வகவமும் அடையாளம் தந்த தினகரனும்! - கலைமகன் பைரூஸ்

திங்கள், 6 நவம்பர், 2023

எனை உச்சாணியில் ஏத்திய வகவமும் அடையாளம் தந்த தினகரனும்! - கலைமகன் பைரூஸ்

    என் எழுத்துகளுக்கு அச்சாணியாய் அமைந்தது 'தினகரன்' என்று சொல்லிக் கொள்வதில் முதலில் நான் பெருமிதமடைகின்றேன். எனது ஆரம்ப எழுத்துக்கள் தினகரன் சிறுவர் உலகத்திலேயே (ஆனந்தி அக்காவின் தயாரிப்பில்)  1985 களில் முகிழ்த்தது. 

    இறையருளால், அன்றைய தினகரனில் எனது எழுத்துகள் களம் காணாது விடப்பட்டிருந்தால் இன்று 'கலைமகன்' எனும் பெயரில் நான் வலம் வந்திருப்பது என்பது நடந்திராத நிகழ்வு என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. 

    பின்னர் தொடர்ந்தேர்ச்சியாக எனது ஆக்கங்கள் இலங்கையின் பல்வேறு பத்திரிகைகளில் வௌிவந்தாலும் கூட, தினகரனின் பங்களிப்பு என்பது அலாதியானது... கனதியானது என்பதில் ஆத்ம திருப்தி எனக்குள். 

    பிற்காலத்தே எனது ஆக்கங்கள் பிரசுரமாகாத போதும், தினகரன் 'செந்தூரம்' இணைப்பிதழில் விசு கருணாநிதி அவர்கள் 2018 மே 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எனைப் பற்றி 'மனம் விட்டுச் சொல்கிறேன்' எனும் பகுதியில் எழுதியமை வாழ்வில் மறக்கவியலாததாகும். அவருக்கும் தினகரனுக்கும் என் ஆழ்மன நன்றிகள்!

    கவிஞரும் பன்னூலாசிரியருமான மேமன்கவி, வகவத் தலைவர் கவிமணி என். நஜ்முல் ஹுஸைன் ஆகியோருடனான தொடர்பு எனக்கு வகவத்தை அறிமுகம் செய்து, ஆன்றோரும் சான்றோரும் நிறைந்த அவைகளில் எனக்குக் கவிபாடக் களம் அமைத்துத் தந்ததை என்றும் மறக்கவியலாது. 

    கவிஞரும், ஆய்வறிஞரும், சட்ட வல்லுநரும், தினகரன் வாரமஞ்சரி 'படித்ததும் பகர்வதும்' புகழ் ரஷீத் எம். இம்தியாஸ் அவர்களையும் என் பேரின் பங்காளியாக்குவதில் இணைத்துக் கொள்வதில் மகிழ்வெனக்கு. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கவிதா நிகழ்வில் எனக்கு அறிமுகம் தந்தவர் அவர். 

    கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரி, கொழும்பு பழைய நகர மண்டபம் என்பவற்றில் சான்றோர் தலைமையிலான கவிதாகூட்டங்களில் கவிதை பாடியுள்ளேன். என் ஆக்கங்களைக் கண்ட - கேட்ட பலரும் எனை ஏத்தித்தந்தமை தமிழை நானும் மேலும் ஏத்துதற்கும்., கற்பதற்கும் காலாக அமைந்ததென்பதே உண்மை.

    எதிர்பாராத விதமாக 87 ஆவது கவியரங்கின் தலைமையை ஏற்பதற்கு நான் அழைக்கப்பட்டாலும் கூட, தவிர்க்கமுடியாத சில காரணங்கள் அதில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை..93 ஆவது கவியரங்கில்தான் என்னால் தலைமை ஏற்க முடிந்தது. தமிழ்த்தென்றல் போன்ற சிறந்த ஆளுமைகள் நிறைந்த கவிதா நிகழ்வில் நான் கலந்து கொள்வதென்பதும், சான்றோரான - ஆழ்ந்த புலமைமிக்ேகாரானவர்களை நான் விளிப்பது என்பதும் கத்தியில் நடப்பது போன்றதுதான். என்றாலும் என் தாய்த்தமிழின் மீது, எனை இறைதுணையால் வாழவைக்கும் தமிழின் மீது நம்பிக்ைக இருந்தது. என் நாவினில் குறையாத தீந்தமிழ் தரும் இறைவான்பால் இருந்தது. 


    என் தலைமையின் கீழ்,  கிண்ணியாவைச் சேர்ந்த மரபுக்கவிஞரும் ஆசிரியருமான சபீனா வைத்துல்லாஹ், பன்முக ஆளுமை தாட்சாயினி சர்மா, பன்னூல் ஆசிரியரும், கவிஞரும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான வெலிப்பன்னை அத்தாஸ், கவிஞர் பர்ஹத் ஸித்தீக், ஊடகவியலாளரும் கவிஞருமான இளங்கோ அவர்களின் மகள் இ. கலைநிலா, தமிழ்ப்பாட ஆசிரியர், மினுவங்கொட ஏ. சிவகுமார், பன்முக ஆளுமை சந்தக்கவி அமீரலி, சிந்தனைப் பிரியன் முஸம்மில், வித்துவக்கவி ராஜா நித்திலன், கவிதாநதி எம். பிரேம்ராஜ், கவிஞர்களான தங்கமணி, வாசுகி பி. வாசு, தி. சிறிதரன்,  பன்முக ஆளுமைகளான தமிழ்த்தென்றல் அலி அக்பர், வதிரி சி. ரவீந்திரன் போன்றோர் கவிதை பாட வந்திருந்தனர்.

    முறைசார் ஆரம்ப நிகழ்வுகளுக்குப் பின்னர், வகவத்தின் தலைவர் எனை சபைக்கு எனை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் வகவத்தின் செயலளார் இளநெஞ்சன் முர்ஷிதீன் அவர்களும் கவிஞர் ஈழகணேஷ் அவர்களும் எனை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். 

    வழமைபோல, வகவத் தலைவர் எனை மேடைக்கு அழைத்து கவிதா நிகழ்வின் தலைமையை எனக்கு வழங்குதற்கு முன் எனை விளித்த பாங்கு எனைப் புல்லரிக்க வைத்தது. என் தமிழின்மீது வகவமும், தமிழ்ச்சான்றோரும் கொண்டுள்ள உண்மைக்காதலைக் கண்டு எனையறியாமல் அக்கணம் கண்கள் நீர்சிந்தின எனின் மிகையன்று. 

    யாப்பியல் தவறாத் தமிழில் ஒவ்வொருவரையும் நான் விளித்தேன். வந்த ஒவ்வொருவரும் தங்கள் கவிதையைச் சொல்வதற்கு முன்னர் எனைச் சொல்லிய முறை கண்டு இறைவனுக்ேக அனைத்துப் புகழும் என அவன்பால் மனமகிழ்வினைச் சாத்தினேன். 

    தமிழ்தென்றல், சந்தக்கவி போன்றோரை விளிக்கும்போது நான் கூனிக்குறுகியே அவர்களை விளித்தேன். என்றாலும் அவர்களும் எனைத் தட்டித் தந்தமை 'தகைசால் விருது' இதுதான் எனக் கண்டேன். நானாக நாடாமல் தானாக வந்த வாழ்த்துகளை, சந்தக்கவி அமீரலியே எனைச் 'சந்தக்கவி' நாமம் சூட்டியழைப்பதை புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளையவர்கள் அ.மு சரிபுத்தீன் அவர்களுக்கு வழங்கிய புலவர்மணிப் பட்டம் போல காண்கிறேன் நான்!

    நிகழ்வின் ஈற்றில் முத்தாய்ப்பாய் நான், எனது நண்பரும் கவிஞரும், கல்வியியலாளருமான தெல்தோட்டை ஜெமீல் சேர் அவர்களின் கவிதையொன்றின் கனதி கருதி அதனை, எனது சாயலில் படித்தேன். சபை ஆடாமல் - அசையாமல் இருந்ததும், நிகழ்வின் ஈற்றில் பலரும் கவிதா வாசிப்பு என்பதும் தனித்துவமானது என்று எனைத் தட்டித் தந்தமையையும் என்றும் மறவேன். 

    நிகழ்வின் ஈற்றில் பலரும், எனைக் கட்டிப்பிடித்து  ஆலிங்கனம் செய்து, அன்றைய கவிதா நிகழ்வின் தலைமையை ஏற்றிப் போற்றியமை இன்னும் என் கண்களுக்கும் விட்டு விலகாத நிகழ்வாக.

    அன்றைய நாள், கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியில் அகில இலங்கைத் தமிழ்த்தின விழா தேசிய நிலை எழுத்தாக்கப் போட்டிகள் நடைபெற்ற நாள். எனது மகன் எம்.எப் ஹாலித் தென் மாகாணத்திலிருந்து குறுநாடக ஆக்கத்திற்காக வெலிகம - மதுராப்புர அஸ்ஸபாவிலிருந்து கலந்து கொண்ட நாள். மகனைப் போட்டிக்கு இணைத்துவிட்டு நான் கவிதா நிகழ்வில் தலைமை ஏற்க வந்திருந்ததென்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. 

    வீட்டுக்கு வந்தாலும் வகவகத்தின் அன்பு குறையவில்லை. நான் வீட்டை அடைந்துவிட்டேனா என்று அன்பான அழைப்பு... மற்றுமொரு புதியதொரு இலக்கதினூடாக சத்திய எழுத்தாளர் நாகூர் கனியின் அன்பான அழைப்பு... அவரின் சீரிய தட்டிக்ெகாடுப்பும் நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லையே என்ற ஆதங்கமும்... மறுநாளும் அதே ஆதங்கம் அவரின் அழைப்பில்... வித்ததக்கவி ராஜா நித்திலனின் அழைப்பு... அப்பப்பா! இறைவனுக்கே புகழனைத்தும் உரித்தாகுக!

    நிகழ்வின் முன்னரும் பின்னரும் 'விடிவௌ்ளி' , 'தமிழ் முரசு', 'தினகரன் வாரமஞ்சரி - செந்தூரம்' போன்ற பத்திரிகைகள் கவிதா நிகழ்வு பற்றி மிகச் சிறப்பாகவே செய்திகளை - கட்டுரைகளை வௌியிட்டிருந்தன. அவ்வவ் பத்திரிகைகளின் ஆசிரியர்கட்கும் எனது நன்றிகள் உரித்தாகுக. 







    'தட்டிக் கொடுப்பதால் ஒன்றும் குறைந்து போவதில்லை.. நற்றகைக ளே தோன்றும் என்பதை தகைசான்ற சான்றோர் மட்டுமே அறிவர்' என்பது எனது பணிவான கூற்றாகும்...

    (நீளம் கருதி சுருக்கிக் கொண்டேன்.)

-மதுராப்புர, கலைமகன் பைரூஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக