It கலைமகன் கவிதைகள்: பதிக்கென வாழ்வாள் பதியின் வாழ்வாள்!

சனி, 5 அக்டோபர், 2013

பதிக்கென வாழ்வாள் பதியின் வாழ்வாள்!


தன்பதிக்கென வாழ்ந்த பதியிவள்
தன்னாசைகள் எலாம் துறந்தவள்
இன்முகத்தொடு பதியை பார்த்தவள்
இல்லானிற்காய் வாழ்வினை நீத்தவள்!

தன்னிலை துறந்த போதும்பதி
தன்னிலை துறவாத பதியிவள்
என்னிலிவன் என்றே இவள்
எண்ணிலாதன செய்தாள் நிதம்!

விதியின் மாறுதலான் சிக்குண்டு
வடிவென வந்த மங்கைபாலவன்
அதிகாதல் பூண்டு நிலையழிந்த
அதிகாரம் தெரிந்தும் மௌனித்தவள்!



பேடையிழந்த அன்றிலாய் மாறி
பேதலித்த நாழிகைகள் எத்தனையோ?
நடைபிறழக் கூடாதவன் என்று
நாட்டமின்றி நாட்டத்துடன் வாழ்ந்தவள்!

தன்சதங்கை தான்கழற்றி தன்பதிக்கு
தரமான தொழில்செயவே தந்தாள்
புன்மனம் அவன தென்றறிந்தும்
புழுவாய் துடித்தும் செய்தாள்பணி!

இறந்தான் தன்பதி யென்றறிந்திவள்
இறந்தாள் உளத்தால் வைதாளரசை
இறந்தான் சோழன் கோப்பெருமான்
இறந்தாள் அவன்பதியும் இறந்தான்கண்டு!

கண்டது மதுரை புகைமண்டலமது
கண்டது பாரும் கண்ணகியின் மேன்மை
விண்ணிடிந்த தன்னதாய் அழிந்ததுபதி
கண்ணகி பேருற்றே இன்றுமுள்ளாள்!

சதங்கை காணும் உள்ளம் எண்ணும்
சதாநங்கை கண்ணகிவடிவு – நிசம்
பதிக்கென இழைத்த பாவத்திற்காய்
பத்தினி கண்ணகி கதைதந்தாளன்று!

இவளால் வந்ததே பனுவல் சிலம்பு
இன்றும் அறுசுவை தந்திடும் பனுவல்
பவங்கள் பலவும் செய்திட்டபோதும்
பதிக்கென வாழ்வாள் பதியின் வாழ்வாள்!

-தமிழன்புடன்
கலைமகன் பைரூஸ்
2013/10/05 10:23

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக