It கலைமகன் கவிதைகள்: உன்னில் எனையிழந்தேன் வெண்ணிலவே!

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

உன்னில் எனையிழந்தேன் வெண்ணிலவே!


வானக் கடலிடை வட்டமா யொரு
வண்ண முகங்காட்டி நின்றே நீ
என் மனதிடை புகுந்தனை நிலவே
என்னுள்ளக் காதலி நீயலவோ மதியே!

உந்த னெழிலினில் எனை யிழந்தேன்
உன்மத்தம் ஆகிவிட்டேன் நிலவே -இங்கு
எந்தன் பார்வை யெங்கும் உன்னில்
எனையே மறக்கச் செய்தனையே நீ!

தங்கக் குழம்பெடுத்து வெள்ளி சேர்த்து
தகதகவென்று நீமின்ன செய்தவனை நான்
எங்ஙனம் புகழ்வேனோ - என்னவளே இங்கு
எடுப்பார் கைப்பிள்ளை நீயலவே - நிலவே!

இருளரக்கன் வெட்கிக்க நீவருவாய் மதியே
இருண்ட உள்ளத்து ஒளியேற்ற நீவருவாய்
பேருற்றாய் ஒளியாலே நீ ஞாலமீதில்
பேதை மனம் களிப்புறவே நீவருவாய்!

ஆதவனும் வெட்கித்தா னுன்னெழில் கண்டு
அருகினிலே உடுச்சேடி அழகுண்டு நின்றிட்டாள்
மாதவறு ஏதுமிலை ஆசுஏதுமிலாள் நீயே
மண்ணில் எலோரும் களிப்புற வருவாய்நீ!

-கலைமகன் பைரூஸ்
15.04.2014 8.47

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக