It It கலைமகன் கவிதைகள்: பெயரடை, வினையடைகள் பற்றி இலக்கண நூலார் கருத்து Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

திங்கள், 13 ஜனவரி, 2025

பெயரடை, வினையடைகள் பற்றி இலக்கண நூலார் கருத்து

தமிழ்மொழி மாபெரும் ஆழி போன்றது. அதனது இலக்கணம் ஆழ்மனதில் பெருங்களியை உண்டாக்க வல்லது. ஆயினும், இன்று இலக்கணத்தைத் துறைபோகக் கற்போர் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றமை துன்பியல் சம்பவமாகும் எனத் துணிகிறேன். 

தமிழ் கற்பிக்கும் சகலரும் ஆழ்கடலில் முத்து எடுக்கப் புகுந்தார்களா? என வினவின், அதற்கான விடை எள்ளளவே என்பது எனது எண்ணப்பாடு. (ஆம், நாம் கற்றவை எள்ளினும் நுண்மையே.)

இலக்கியத்தைக் கற்பிப்பதற்கு ஆழஅகல இலக்கணம் தெரிய வேண்டும்.

அவ்வாறு இலக்கணம் தெரியாது விட்டால், தற்காலத்து மாணாக்கரின் நியாயமான வினாக்களுக்கு விடையளிக்க சிரமப்பட வேண்டியேற்படும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை என்பேன். தினந்தோறும் தமிழாசிரியர்கள் தங்களைப் புடம்போட, தங்களை இற்றைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தமிழ் இலக்கணத்தைக் கற்றால்  - கற்பித்தால் தன்னெஞ்சே தன்னைச் சுட வழியாக அமையுமன்றோ...

நான் அறிந்தவகையில் தமிழில் ஏற்படும் சந்தேகங்களைக் கேட்கவும், அதற்கான விடைகளைச் சரிவர வழங்குதற்கும் இலங்கையில் இருக்கின்ற ஒரேயொரு புலனக் குழுமம்தான் 'தமிழ்மொழி ஆசிரியர்கள்' எனும் குழுமம். அந்தக் குழுமத்தை உருவாக்கியவர் தமிழுழவர், மொழிவல்லார் திரு. றபீக் மொஹிடீன் ஆசான் அவர்களது தளத்திற்குச் நாளும்சென்று வருவதும், கல்லாதவற்றைக் கற்றுவருவதும் எனது வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். 

இனி விடயத்திற்கு வருகிறேன். 

பெயரடை, வினையடை, பெயரெச்சம், வினையெச்சம் என்பவற்றுக்கான பிரதான வேறுபாடு யாது? என தமிழ்த்தாகம் கொண்ட ஆசான் ஒருவர் வினா தொடுத்திருந்தார். அவரது வினாவுக்கு நொடியில் எனக்கு விடையளித்திருக்கவியலும். என்றாலும், இலக்கணத்தை நுனிப்புல் மேயாமல் ஆழஅகலக் கற்க வேண்டும் என்பதால், நான் தமிழியல் கற்ற குறிப்பிலிருந்து (முனைவர் அ. ஜேம்ஸ் ஆசான்) தௌிவினை ஏற்படுத்த இத்தளத்தில் இற்றைப்படுத்துகிறேன். 

(வேகமாகத் தட்டச்சிடுவதால் ஆங்காங்கே - சிற்சில இடங்களில் ஒற்றுக்கள் தவற விடப்படலாம். பொருத்தருள்க.) இறையருள் கிட்டின், நாளை பிழைகளை நீக்க ஆவன செய்வேன். 

உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்....

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்

('கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு')

-------------------------------------------------------------------

 பெயரடை, வினையடைகள் பற்றி இலக்கண நூலார் கருத்து

பழைய இலக்கண ஆசிரியர்கள் பெயரடை, வினையடை ஆகியவற்றைத் தனித்தனி வகையாகக் கருதவில்லை. இருப்பினும் அவர்கள் பெயரடை வினையடை பற்றிக் கூறாமல் இல்லை. பெயரடை, வினையடை என்னும் பெயர்களால் குறிப்பிடவில்லை என்றாலும் இவற்றை முறையே குறிப்புப் பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் என்ற பெயர்களால் பழங்காலந் தொட்டே குறிப்பிட்டு வந்துள்ளனர்.

    நன்னூலார் வினைச்சொற்களைத் தெரிநிலை வினைச்சொல், குறிப்பு வினைச்சொல் என இரண்டாகப் பிரித்து, அவை இரண்டும் வினைமுற்றாகவும் பெயரெச்சமாகவும், வினையெச்சமாகவும் வரும் என்கிறார்.

    அவைதாம்

     முற்றும் பெயர்வினை எச்சமும் ஆகி
     ஒன்றற்கு உரியவும் பொதுவும் ஆகும்
             (நன்னூல். 322)

    தமிழிலக்கண நூலார் பெயரடை, வினையடை ஆகியவற்றை முறையே குறிப்புப் பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் என்ற பெயர்கள் இட்டுக் கூறினாலும், அவை இரண்டையும் இக்கால மொழியியலார் பலவாறு வகைப்படுத்தி விளக்குவது போல விளக்கினார்கள் இல்லை. இக்கால மொழியியலார் பெயரடை, வினையடை இரண்டையும் பலவாறு வகைப்படுத்தி விளக்கிக் காட்டியுள்ளனர்.

    எனவே நன்னூலார் கருத்துப்படி பெயரெச்சம் என்பது தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும். அதேபோல வினையெச்சம் என்பது தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும். இவற்றைச் சான்றுகளுடன் விளக்கிக் காண்போம்.

தெரிநிலைப் பெயரெச்சம்

    ஒரு செயல் அல்லது தொழிலை உணர்த்தும் ஒரு வினை அடிச் சொல்லிலிருந்து தோன்றி, முக்காலம் காட்டும் இடைநிலைகளுள் ஒன்றனைப் பெற்று, பெயரெச்ச விகுதியாகிய  என்பதோடு சேர்ந்து வருவது தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.

    வினை அடிச்சொல்     - செய்

    இறந்தகால இடைநிலை -     த்

    பெயரெச்ச விகுதி     - 

    தெரிநிலைப் பெயரெச்சம் - செய் + த் + அ = செய்த

    இத்தெரிநிலைப் பெயரெச்சம் ஒரு பெயரைக் கொண்டு முடியும்.

    செய்த பையன்


        குறிப்புப் பெயரெச்சம்

    ஒரு பண்பை உணர்த்தும் அடிச்சொல்லோடு பெயரெச்ச விகுதியாகிய  என்பது சேர்ந்து வருவது குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.

    பண்பு அடிச்சொல் - நல்

    பெயரெச்ச விகுதி     - 

    குறிப்புப் பெயரெச்சம் - நல் + அ = நல்ல

    இக்குறிப்புப் பெயரெச்சம் காலம் காட்டாது ; தன்னை ஏற்கும் பெயரைச் சிறப்பிக்கும் அடையாக வரும்.

    நல்ல பையன்

    இவ்வாறு பெயரைச் சிறப்பிக்கும் அடையாக (நல்ல) வருவதால்குறிப்புப் பெயரெச்சம் என்று தமிழிலக்கண நூலார் கூறிய அதனை, இக்கால மொழியியலார் பெயரடை (Adjective) என்று குறிப்பிடுவது மிகப் பொருத்தமே எனலாம்.

    தெரிநிலை வினையெச்சம்

    ஒரு செயல் அல்லது தொழிலை உணர்த்தும் ஒரு வினை அடிச் சொல்லிலிருந்து தோன்றி, முக்காலம் காட்டும் இடைநிலைகளுள் ஒன்றனைப் பெற்று, வினையெச்ச விகுதிகளாகிய ,  என்பனவற்றோடு சேர்ந்து வருவது தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

    வினை அடிச்சொல்     - செய்

    இறந்தகால இடைநிலை -     த்

    வினையெச்ச விகுதி     - 

    தெரிநிலை வினையெச்சம் - செய் + த் + உ = செய்து

    இத்தெரிநிலை வினையெச்சம் ஒரு வினையைக் கொண்டு முடியும்.

     செய்து வந்தான்


        குறிப்பு வினையெச்சம்

    ஒரு பண்பை உணர்த்தும் அடிச்சொல்லோடு, வினையெச்ச விகுதிகளாகிய ,  என்பன சேர்ந்து வருவது குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

    பண்பு அடிச்சொல்     - மெல்

    வினையெச்ச விகுதி - 

    குறிப்பு வினையெச்சம் - மெல் + அ = மெல்ல

    இக்குறிப்பு வினையெச்சம் காலம் காட்டாது, தன்னை ஏற்கும் வினைச்சொல்லைச் சிறப்பிக்கும் அடையாக வரும்.

    மெல்ல வந்தான்

    இவ்வாறு வினைச்சொல்லைச் சிறப்பிக்க வரும் அடையாக (மெல்ல) வருவதால்குறிப்புப் பெயரெச்சம் என்று தமிழ் இலக்கண நூலார் கூறிய அதனை, இக்கால மொழியியலார் வினையடை (Adverb) என்ற பெயரால் குறிப்பிடுவது மிகப் பொருத்தமே எனலாம்.

நன்றி - ஆசான், முனைவர் அ. ஜேம்ஸ்

--------------------

சுருங்கச் சொன்னால்...
------------------------------------

பெயரடை

ஒரு பெயரைக் குறித்து மேலும் விளக்கம் அல்லது விரிவு தருமாறு அமையும் சொல்.பெயரடையாகும்.

உதாரணம்  மரம் என்னும் பெயர்ச்சொல்லைப், பெரிய மரம் என்று விரித்து கூறினால், அதில் பெரிய என்னும் சொல் பெயரடை ஆகும்.

 வினையடை

தமிழில் வினைச்சொல் ஒன்றை மேலும் விளக்கும் வகையில் அதற்கு அடையாக வரும் குறைசொல்லே வினையடை ஆகும். இடைச்சொல்லும், உரிச்சொல்லும் வினைக்கு அடைமொழியாக வரும்.

எப்படி?, என்ன விதத்தில்?, எப்போது?, எங்கு?, எந்த அளவிற்கு? போன்ற கேள்விகளுக்கு வினையடைகள் விளக்கம் தருகின்றன. 

பெயரெச்சம்

ஒரு முற்றுப்பெறாத 'வினைச்சொல்' எச்சமாக நின்று , 'பெயர்ச்சொல்' கொண்டு பொருள் தந்து முடிவுறும் சொல் பெயரெச்சம் எனப்படும்.

உதாரணம்

*விழுந்த* மரம் ('அ' ஓசை)

(பெயரெச்சத்தில் பெரும்பாலும் எச்சச்சொல்லின் ஈற்றில் ‘அ’ ஒலியிருக்கும்.)

 வினையெச்சம்

ஒரு முற்றுப்பெறாத 'வினைச்சொல்' எச்சமாக நின்று , 'வினைச்சொல்' கொண்டு பொருள் தந்து முடிவுறும் சொல் வினையெச்சம் எனப்படும்.

உதாரணம்

*விழுந்து* எழுந்தான். ('உ' ஓசை)
*ஓடி* விழுந்தான். ('இ' ஓசை)

(வினையெச்சத்தில் பெரும்பாலும் எச்சச்சொல்லின் ஈற்றில் ‘இ, உ, ஒலியிருக்கும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக