இரவு நேரம். கண்களுக்கு எதுவும் புலப்படாத சூழல். புல்லின் நிழலில் பூச்சி இருப்பதையும் காண முடியாத நிலை. ஆனால், பூசன் ஓசை வழியே பூச்சி இருப்பதை உணர்கிறார். இரவு நேரத்தில் துல்லியமாய் ஒலி, ஒளி, நிழல், இருட்டு என அனைத்தையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கும் கவிஞரின் உள்ளம் இதன்வழி புலனாகின்றது.
இளவேனில் காற்று வேகமாக வீசுகிறது. அதனால் கடையில் புத்தகங்கள் மேல் கனமான பொருள் வைக்கப்பட்டிருக்கிறது. அது காற்றின் வருகையை நமக்கு உணர்த்தும் பொருளாகிறது. நம்மைச் சுற்றி இயற்கையின் வருகையும் மாறுதலும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அதனால், நமக்கு அது சாதாரணமாகி விடுகிறது. கிடோ போன்ற கவிஞர்களால் ஆழ்ந்து கவனிக்கப்படுகிறது.
கேள்வி: ஹைக்கூ கவிதையில் கற்பனைக்கு இடமுண்டா?
பதில்: இதில் கற்பனைக்கு இடமில்லை. கவிஞன் தான் கண்ட காட்சியில் கற்பனையைக் கலக்காமல் அப்படியே தரவேண்டும். கவிஞன் வாழ்ந்து பெற்ற ஓர் அனுபவத்தைக் கற்பனை கலவாமல் மிகக் குறைந்த சொற்களில் வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. அது கண்டிப்பாக ஒரு செய்தியையோ அல்லது கருத்தினையோ சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், ஓர் அனுபவத்தைச் சொல்ல வேண்டும். சொல்ல வருவதைக் காட்சிப்படுத்துவது சிரமம்தான். தொடர் பயிற்சியும் விடாமுயற்சியும் பலன் தரும்.
கேள்வி: ஹைக்கூ எழுதுவது சிரமமானது என்று சொல்லப்படுகிறதே?
பதில்: உண்மைதான். அதன் வடிவம் எளிமையானது. ஆனால், கவிதை எழுதுவது சிரமமானது. ஹைக்கூ இலக்கணத்தை உள்வாங்கிக் கொண்டு, குறைந்த சொற்களில், அணிகளின்றி, ஓர் அனுபவத்தை அல்லது ஒரு காட்சியைக் கூர்ந்து நோக்கிப் பதிவு செய்வது சிரமம்தான்.அது விடுகதையாக, புதிராக, கேள்வி பதிலாக அமைந்து விடக்கூடாது. எளிய உயிர்க்கு இரங்கல், இயற்கைக்கு மீளல் ஆகிய இரண்டு அடிப்படைக் கூறுகளில் கவனம் செலுத்தி கவிதை எழுதிப் பார்க்கலாம். 'ஹைக்கூவைச் செய்ய முடியாது. அது எங்காவது தென்படும். அதை அடையாளம் காண ஒரு தனிப்பார்வை வேண்டும்.
ஹைக்கூ எழுதும் கலை ஒரு நாளில் கைகூடி வராது. தொடக்க காலத்தில் நான் எழுதிய 2 ஹைக்கூக்களை நீக்கியுள்ளேன். சிலவற்றைத் திருத்துகிறேன். தொடர்ந்து எழுதியும், எழுதியதைத் திருத்தியும் பொருந்தி வராததை நீக்கியும் செல்லும் போக்கே தரமான ஹைக்கூக்களை மலரச் செய்யும்.
கேள்வி: நீங்கள் எழுதும் ஹைக்கூ கவிதைகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதா?
பதில்: 2007இல் தமிழகம், பொள்ளாச்சியில், நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் பேசிய சாகித்திய விருதுபெற்ற கவிஞர் புவியரசு, என் ஹைக்கூ கவிதையொன்றைக் குறிப்பிட்டு என்னை முன்னே அழைத்து வாழ்த்தினார். அது என் ஹைக்கூ கவிதைகளுக்குக் கிடைத்த மறக்க முடியாத ஆதரவுக் குரலாகும். அந்தக் கவிதை இதோ:
வாடகை வீடு மாறும் நாளில்
அவள் நட்ட செடியில்
சில பூக்கள்
சிங்கப்பூர் கல்வி அமைச்சின்
ஏ லெவல் பாடத்திட்டத்தில் என் இரண்டு ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
கேள்வி: ஹைக்கூ எழுத விரும்புவோர்க்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: ஹைக்கூ உலகம் அற்புதமானது; விரிவானது; ஆழமானது. இதுவரை எனக்குக் கிடைத்த அனுபவம் ஒரு துளி மட்டும்தான். 'இது வெறும் மூன்று வரி விவகாரம். ஹைக்கூவில் ஒன்றுமில்லை' என்று புரியாமல் ஒதுங்கிப் போவோருக்கு ஹைக்கூ என்றும் புலப்படாது.
ஹைக்கூ நினைக்க நினைக்க நெஞ்சில் இனிக்கும் அனுபவமாகும். இந்தப் பிரபஞ்சத்தின் மர்மங்களை, நாம் சாதாரணம் என்று நினைக்கும் அன்றாட நிகழ்வுகளை, மனித மனத்தின் நுட்பமான உணர்வுகளைத் திடீரென திரை விளக்கிக் காட்டும் ஆற்றல் கொண்டது ஹைக்கூ.
ஹைக்கூ பற்றி பிளித் என்பார் கூறியுள்ள கருத்து நம் சிந்தனைக்குரியது. 'ஹைக்கூ நம்மைத் தட்டி அழைக்கும் கை; பாதி திறந்திருக்கும் கதவு; தூய்மையாகத் துடைக்கப்பட்ட கண்ணாடி ; இயற்கையின்பால் நம் கவனத்தை ஈர்க்கும் இலக்கிய வடிவம்; பேசாமல் பேசி நம் மனிதாபிமானத்தில் பங்கு கொள்ளும் இலக்கியச் சாதனம்'.
கேள்வி: ஹைக்கூ பற்றிய தெளிவுபெற ஆய்வு நூல்கள் உள்ளனவா?
பதில்: தமிழில் நிர்மலா சுரேஷ், லீலாவதி எழுதிய நூல்கள் ஹைக்கூ பற்றிய தெளிவைத் தருகின்றன. ஆங்கிலத்தில் ஆர்.எச். பிளித், கென்னத் யசூதா, ஹெண்டர்சன் ஜி.ஹெரால்ட் எழுதிய நூல்கள் உள்ளன. வில்லியம் ஜே.ஹிக்கின்சன் எழுதிய The Haiku Handbook என்ற நூல் ஒரு முழுமையான விளக்க நூலாகும்.
-------------------------------
கவிக்கோ | #கவிக்கோ | #கவிக்கோ_அப்துர்_ரஹ்மான் | அப்துல் ரகுமான் | தமிழ் இலக்கியம் | கவிதையியல் | வரவுக்கவிதை ஹைக்கூ
-------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக