பாரதி_வாழுகின்றான்!
(அறுசீர் விருத்தம்)
வேரிலா நாற்றைக் கொண்டு
யாரவன்? நம்பாட்டன்தான்!
அவன்தமிழ் நம்மிடத்தில்
வாரித்தான் வழங்கி வைத்தான்!
வண்ணத்தில் குழைத்தும் தந்தான்!
பாரதிப் புலவன் வாழ்க!
பாருள்ள மட்டும் வாழ்க!
பாட்டென ஒன்றை நாட்டிப்
பைந்தமிழ்ப் படையல் போட்டான்!
ஆட்டமாய் ஆட்டு வித்தான்
அழகிய மயிலை எல்லாம்!
கூட்டமாய்க் குயிலைக் கூட்டி
கேட்டவர் மயங்கி நின்றார்!
கிள்ளைபோல் கிறுகிறுத்தார்!
கல்லிலும் பாடல் தோன்றும்!
கானிடை ஓசைக் குள்ளே
மெல்லஓர் பாட்டு வந்து
மேனியைக் குளிரச் செய்யும்!
சொல்லவும் கூடு தில்லை
சொற்களின் தேன்கூட்டுக்குள்
எல்லையில் லாத இன்பம்!
ஏடெல்லாம் மணக்கச் செய்தான்!
கண்ணனைக் காத லித்தான்!
கன்னத்தில் முத்த மிட்டான்!
எண்ணத்தால் குயில்தோப்புக்குள்
எத்தனை தத்துவங்கள்!
பண்ணுக்கே பண்ணளித்தான்!
பாப்பாவைப் பாட வைத்தான்!
சுண்ணம்போல் வெளுத்த நெஞ்சால்
துயரத்தை மறைத்துக் கொண்டான்!
சாவேந்தாப் பாட லுக்குள்
தமிழ்சந்த மொலிக்கக் கேட்ட
பாவேந்தர் நண்ப ரானார்!
பைந்தமிழ்ப் புரட்சி அன்றே
நாவேந்தி வெடிக்கக் கண்டோம்!
நற்றமிழ் நாடெல் லாமும்
பாவேந்தர் பரம்ப ரைக்குள்
பாரதி வாழு கின்றான்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#வாங்கனூர்_அ_மோகனன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக