It கலைமகன் கவிதைகள்: போல

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

போல


குழந்தை அழும் !
அழுவதால் நீ
குழந்தையாக முடியாது !

பூ புன்னகைக்கும் !
புன்னகைப்பதால் நீ
பூவாக முடியாது !

காற்று தழுவும் !
தழுவுவதால் நீ
காற்றாக முடியாது !

நதி ஓடும் !
ஓடுவதால் நீ
நதியாக முடியாது !

மழைத்துளி விழும் !
விழுவதால் நீ
மழைத்துளியாக முடியாது !

வானவில் வளையும் !
வளைவதால் நீ
வானவில்லாக முடியாது !

கம்பன் கவிசெய்தான் !
கவிசெய்வதால் நீ
கம்பனாக முடியாது !

மாதிரியின் முகமூடியில்
தன் முகவரி இழந்தவனே !

நில்!
சூரியன் தனை உள்வாங்கித்
தன் சுயம் இழக்காத
நிலவைப் பார் !

கவனி !
மாதிரியைப் படி
அதன் மாதிரி நீ
ஆகிவிடாதபடி !

செல் !
மாதிரியைத் தொடர்ந்து அல்ல !
மாதிரியின் பாதைகளில்
தொடர்ந்து...

போலச் செய்து
போலியாகி விடாதே !

மாதிரி
சூரிய ஒளிகீற்றுகள் தான் !
அதில்
உன் சுயமெனும்
கண்களை இழந்துவிடாதே !

மாதிரியை
உன் தோளில் வை !
மாதிரியின் தோளில்
நீ சவாரி செய்யாதே !
ஏனென்றால்
உன் சுவடுகள்
தெரியாமல் போய்விடும் !


- பாண்டூ

நான் நயந்த பலமுறை சுவைத்த நல்ல கவிதை (கலைமகன்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக